சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக மகிளா காங்கிரஸ் தொண்டர்கள், சென்னையில்உள்ள காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும், இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இதற்கிடையில், சிஏஏவுக்கு எதிராக கோலங்கள் வரைந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்யுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, திமுக மகளிர் அணியினர் உள்பட ஏராளமானோர் தங்களது இல்லங்களின் முன்பு NO CAA, NO NRC என எதிர்ப்பு கோலமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் அணியான மகிளா காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சென்னை ஜிபி ரோட்டில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வண்ணக் கோலங்களை வரைந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிடும் நிகழ்ச்சி, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி. ஏ.எஸ்.பி. ஜான்சிராணி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் உள்ள சாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் வழக்கறிஞர் சுதா மற்றும் மகிளா காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். இதைப்போல் பல்வேறு இடங்களில் மகளிர் காங்கிரசார் கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சாலைமறியல் செய்ய முன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.