சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சிஏஏக்கு எதிரான தீர்மானம், முதல்வர் மு.க.ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக  நிறைவேறியது.

சிஏஏ எனப்படும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனிநபர் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின்  தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிந்து பேசுகையில், மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை. இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது. நாட்டுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. முன்னதாக அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில்  ஒருமனதாக நிறைவேறியது.

சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்…