சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால்  அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும், கைமுறையாக துப்புரவு செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளிலும், மனிதனே மனித கழிவுகளை அகற்றும் கொடுமை இன்னும் நாடு முழுவதும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. சமீப காலமாக இதற்கான இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தாலும், அவை  முழுமையாகவும், முறையாகவும் இன்னும் நடைமுறைப்படுத்தாத நிலையே தொடர்கிறது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுபோன்ற சம்பவங்களின் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பேற்க வேண்டும், அதற்கான உத்தரவாதத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யும் என்றும், இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும்  உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமைக்கு தடை செய்து,  1993-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தில் மேலும் பல திருத்தங்களும் மீண்டும் 2013ம் ஆண்டு   அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை எந்தவொரு மாநில அரசும் கண்டுகொள்ளாததைத் தொடர்ந்து, 2014-ல் உச்ச நீதிமன்றம்,  இந்த சட்டத்தை செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் உத்தரவை பிறப்பித்தது. அதன்படி,  சாக்கடை அள்ளும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை  தடை செய்வதுடன், அப்பணியில் இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது.

சட்டம் இயற்றப்பட்டு ஆண்டுகள் பல கடந்த நிலையிலும், இன்னும் ஆட்களை வைத்து கழிவு சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் தொடர்ந்துதான் வருகிறது. நாடு முழுவதும் கையால் மலம் அள்ளும் தொழில்  மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை செய்ய சுமார் 2 லட்சம் குடும்பத்தினர் உள்ளதாக கூறப்படுகிறது.  நாட்டில் தொழில்நுட்பங்கள் எவ்வளவுதான் இன்று வளர்ந்துவிட்டாலும், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் இன்னமும் பல இடங்களில் மனிதர்கள்தான் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்,  ஏராளமானோர் விஷவாயு உள்பட பல்வேறு விபத்துக்களிலும் சிக்கி உயிரிழந்து வரும்  அவலங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால்,  இன்றுவரை அதற்கு முழுமையான தீர்வு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இதுபோன்ற அவலங்களை  தடுத்து நிறுத்தும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் இல்லையா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் 1971ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை உள்பட 15 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என சேர்த்து தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைக் கொண்டு,  கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் தொட்டிகளுக்குள் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் மனிதர்களைக்கொண்டே பணிகளை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பான பல வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், கழிவுகள் அடைப்பு, மனிதக்கழிகள் தள்ளுதல், கையால் மலம் அள்ளச்செயதல் போன்ற செயல்களுக்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது, ; இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி கழிவுநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த அவலங்கள் இன்றுவரை அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

துப்புறவு தொழிலாளர்கள் உயிரிழப்பில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதாக பாராளுமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த  2013ம் ஆண்டு முதல் டிசம்பர் 2018 வரை நாடு முழுவதிலும் 323 துப்புரவு தொழிலாளர்கள் இதுபோன்ற பணிகளின்போது உயிரிழந்து உள்ளதாகவும்,. இதில் மிக அதிக அளவாக தமிழகத்தில் 144 பேர் பலியாகியுள்ளனர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் தடையை மீறியும் இப்பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது சில மாநிலங்களில் தொடர்ந்து வருகிறது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.

இந்த நிலையில், மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் கமிஷனர்கள் தங்கள் எல்லைக்குள் மனிதர்களைக் கொண்டு சாக்கடை, மனிதகழிவுகளை  துப்புரவு செய்ய அனுமதிக்க மாட்டோம், மனிதர்களைக் கொண்டு கையால் மலம் அள்ளும் தொழில் செய்ய அனுமதிக்க மாட்டோம் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.

கைமுறையாக துப்புரவு (கையால் மலம் அள்ளும் தொழில்) செய்யும் பணியின்போது சம்பவம் ஏதேனும் நடந்தால் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு,  தனிப்பட்ட முறையில், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே  பொறுப்பேற்க வேண்டும்.

சாக்கடைகளை சுத்தம் செய்ய இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும் & கைமுறையான குப்பைகளைத் தடுப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல் களுக்கான நெறிமமுறைகளை தமிழக அரசு 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

திமுக தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல்அறிக்கையில், மனிதர்களே மனித கவுவுகளை அகற்றும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக சமீபத்தில், திமுக எம்எல்ஏவும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி, தனது தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி கொய்யாத்தோப்பில் இயந்திரத்தை கொண்டு கழிவை அகற்றும் முறையை அறிமுகம் செய்து  வைத்தது குறிப்பிடத்தக்கது.