சென்னை: 2024ம் ஆண்டின்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 12ம் தேதி கூடுகிறது அதைத்தொடர்ந்து  பிப்ரவரி 19ந்தேதி  பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என  சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

கடந்த ஆண்டு (2023) சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் ஆளுநரின் உரை சர்ச்சைக்குள்ளான நிலையில், இந்த ஆண்டு மீண்டும்  பேரவையில் ஆளுநர் உரை வாசிக்க திமுக அரசு அழைப்பு விடுத்துள்ளது. மாநில அரசின் அழைப்பை ஏற்று ஆளுநர் சட்டப்பேரவைக்கு வருவாரா? தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுக்கும் உரையை அப்படியே வாசிப்பாரா அல்லது, கேரள ஆளுநர் வாசித்ததுபோல, ஆளுநர் உரையின் இறுதிபகுதியை மட்டும் வாசித்து விட்டு செல்வாரா? என்பது தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், ஊடகவியலாளர்களிடையே விவாதப்பொருளாக மாறி வருகிறது. 

புத்தாண்டின் பேரவை கூட்டத்தொடர் இதுவரை கூட்டப்படாத நிலையில், பேரவையின் முதல் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும், தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு, அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டதால், பேரவை கூடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இநத் நிலையில், தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேரவை கூட்டத்தொடர் வரும் 12ந்தேதி கூடும் என்றும், அதற்கான உத்தரவை  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை வருகிற 12ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் ஆளுநர்  கூட்டி  இருப்பதாக கூறிய சபாநாயகர்,   இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி 176/1ன் கீழ் அந்த கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார்.

தொடர்ந்து வருகிற 19ம் தேதி (பிப்ரவரி), நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025க்கான நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதைத் தொடர்ந்து, வரும்  20ம் தேதி 2024-25க்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21ம் தேதி 2023-24க்கான முன்பண செலவு மானிய கோரிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளார்.

ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் உரை மீதான விவாதம் குறித்து அலுவல் ஆய்வு குழு முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்றார்.

அப்போது செய்தியாளர்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற வேண்டத்தகாத  நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய சபாநாயகர் அப்பாவு, கடந்த ஆண்டு ஆளுநர் உரையின்போது  பேரவை தலைவராலோ, அரசாலோ எந்த சர்ச்சையும் வரவில்லை. இந்த ஆண்டும் நன்றாக கூட்டம் நடக்கும் என்றார்.

அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் தொடர்பான கேள்விக்கு,  எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பற்றி நீதிமன்றம் செல்லப்பட்டுள்ளது. நீதிமன்றம் சட்டப்பேரவையையோ, சட்டப்பேரவை தலைவரையோ கட்டுப்படுத்தாது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அது வேறு சமாச்சாரம். ஆனால், சட்டப்பேரவைக்குள் ஒரு உறுப்பினரை எங்கு அமர வைக்க வேண்டும் என்கிற முழு உரிமையும் பேரவை தலைவருக்குத்தான் உண்டு. இதையே முன்னாள் இருந்த சபாநாயகர் தனபாலும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் என்று கூறி, பேரவை நிகழ்வுகளில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிரபப்பு செய்யுப்படுமா? நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதே என தொடுக்கப்பட்ட கேள்விக்கு, அதை நினைவுபடுத்த வேண்டியதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்த மறைந்த விஜயகாந்த் தான் சட்டப்பேரவை நிகழ்ச்சியை நேரலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்தது அதிமுக. அவர்கள் பதில் மனுவில், சட்டமன்ற நிகழ்ச்சியை நேரலையாக காண்பிக்க முடியாது என்று எழுதி கொடுத்துள்ளனர். இப்போது, அந்த வழக்கில்தான் அதிமுக சார்பாக வேலுமணி தன்னையும் இணைத்துக்கொண்டு முழுமையாக சட்டமன்ற நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரலையாக, முழுமையாக காண்பிக்க வேண்டும் என்றுதான் இந்த அரசின் முழு கொள்கை, திட்டம். அதை நோக்கிதான் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கேள்வி-பதில்கள் முழுமையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து சில முக்கிய கவனஈர்ப்பு தீர்மானங்கள், அரசு தீர்மானங்கள் எல்லாம் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் யாரும் இதுபோன்று காண்பிக்கவில்லை. படிப்படியாக அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிரப்பும் பணிகளை அரசு செய்து கொண்டிருக்கிறது. 2021 முதல் சட்டப்பேரவையில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆன்லைன் மூலமாக பார்க்க நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் கலைஞர் பேரவையில் பேசியதை கூட அரசு இணையதளத்தில் பார்க்கலாம். எந்த ஒளிவுமறைவும் அரசிடமும் சட்டமன்றத்திடமும் இல்லை.

இவ்வாறு அப்பாபவு கூறினார். அவருடன்  துணை சபாநாயகர் பிச்சாண்டி, கொறடா செழியன், பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.