ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்

Must read

சென்னை:
ன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனே பிரித்து அனுப்பி முழுவதுமாக செலுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தின் தடுப்பூசிகள் தேவையென்பது மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 1,80,32,170 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. அதில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் 1,80,03,777. கையிருப்பு என்பது 3,42,820 தடுப்பூசிகளாகும்.

கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்று மாலைக்குள் தோராயமாக 2.50 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டாலும், மீதம் ஒரு லட்சம் அளவிலான தடுப்பூசிகள் கையிலிருக்கும்.

இன்றைக்குக்கூட எவ்வளவு தடுப்பூசிகள் மீதம் இருக்கிறது என்று மத்திய அரசிற்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் சார்பில் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசிகளில் எந்தெந்த மாநிலங்கள் விரைவாக செலுத்துகின்றன என்பதை கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

ஆனால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்திற்கு அனுப்பப்படும் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனேயே பிரித்து அனுப்பப்பட்டு முழுவதுமாக செலுத்தப்பட்டு விடுகின்றன.

ஜுலை மாதத்திற்கு 5 லட்சம் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்குவோம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த வாரம்கூட பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆறு மாநில முதல்வர்களின் காணொலிக் கூட்டத்தில், ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை செயலாளர், தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட தடுப்பூசிகளில்தான் குறிப்பிட்ட இலக்கையும் தாண்டி, அதிமுக ஆட்சியில் தடுப்பூசி செலுத்தியது மைனசிலிருந்த நிலையில், 4.34 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்ட நிலையில், அதையும் சமன்செய்கிற அளவில் 3 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தை பிரதமர் முன்னிலையிலேயே தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி போடும் பணியென்பது மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வர வர அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு உடனடியாக போடப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இந்நிலையில், ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article