சென்னை: திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான காசோலையை பயனர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து, “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023”னை வெளியிட்டு, தமிழ்நாடு (SC/ST) புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங் களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருக்கோயில் பணியாளர்களுக்கு 3,000 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் 1500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத்திற்கான காசோலையையும் பயனாளர்களுக்கு அவர் வழங்கினார்.

தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் திட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க தொழில் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார். புத்தொழில் சூழமையை மேம்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கி இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியலின, பழங்குடியின புத்தொழில் நிதி திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களுக்கு பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் அவர் வழங்கினார்.