சென்னை: சென்னையில் பருவமழை முடியும்வரை புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்திவைக்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள் மற்றும் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி உள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் நிர்பயா திட்ட நிதியின் கீழ், ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை, வாகனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, பருவ மழை காலம் தொடங்க் உள்ளதால், சென்னையில், பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க முதல்வர் அறிவுறுத்தியதாக அமைச்சர் கே.என்.நேரு  தெரிவித்தார்.

சென்னை உள்பட மாநிலம் மழுவதும் மழைநீர் கால்வாய் அமைப்புகள் முறையாக தூர்வார ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக கூறியவர், சென்னையில் பழுதான சாலைகளை அடுத்த 2 வாரங்களில் முழுவதுமாக சீரமைக்க அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் கூறினார்.

முன்னதாக தலைமைச்செயலகத்தில்,  வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி – நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் ஆகிய 9 துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், மழைநீர் வடிகால் பணிகள், அடைப்புகளை அகற்றும் பணிகள், நீர்நிலைகள் கால்வாய்கள், தடுப்பணைகளின் கதவுகள் குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள் மற்றும் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மின்வாரிய பணிகளுக்கும் சாலையில் பள்ளம் தோண்டக்கூடாது. மழைநீர் கால்வாய் அமைப்புகள் முறையாக தூர்வாரப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்குள் சென்னையில் பழுதான சாலைகளை சரி செய்யும் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.