டெல்லி: தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் 53% குறைந்துள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு’ குறித்து நடைபெற்ற  காணொலி கருத்தரங்கில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாறறினார். அப்போது, நாடு முழுவதும் 4வழி மற்றும் 6 வழிச்சாலைகள் அமைக்கப்படும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பான சாலைப் பயணத்துக்காக நெடுஞ்சாலையை 4 முதல் 16 பிரிவுகளாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் வாகன உற்பத்தியாளர்களும், வாகனத்தில் ஓட்டுநர்கள், பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கக் கோரியும் வலியுறுத்தியுள்ளோம், அந்த புதிய தொழில்நுட்பங்கள் படிப்படியாக அமலாகும்

இந்தியாவில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையையும், உயிரிழப்புகளையும் பாதியாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளோம். 2030ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளோம்.

கடந்த ஆண்டு ஸ்வீடனில் நடந்த மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பங்கேற்றோம். அப்போது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளோம். விரைவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகளை 50 சதவீதம் குறைத்துவிடுவோம்.

சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், நாங்கள் வகுத்த இந்த இலக்கை தமிழகஅரசு நிறைவேற்றி காட்டியுள்ளது. தமிழ்நாடு தனது இலக்கை அடைந்துவிட்டது.  தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் 53 சதவீதம் குறைந்துள்ளது. இதற்காக தமிழகத்துக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்,