சென்னை: தமிழ்நாட்டிற்கு இதுவரை 1 கோடியே 92 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது, 1 கோடியே 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவலை தடுக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால், அதை செலுத்தும் நடவடிக்கையையும் மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டிற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்தும் 1 கோடியே 92 லட்சம் கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது. இதன்மூலம்  சுமார் 1 கோடியே 86 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக, 24.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 29,50,536 பேருக்கும், 23.07.2021 அன்று 32,759 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது  புனேவில் இருந்து விமானத்தில் வந்த 12 பெட்டிகளில் 1 லட்சத்து 44 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதுபோல அதே விமானத்தில் மற்றொரு கண்டெய்னரில் 28 பெட்டிகளில் 3 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்  வந்தள்ளது. இவை மத்திய தொகுப்பிற்காக பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த  தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மே 1 முதல் ஜூலை 13 வரையில் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை விட அதிகமான தடுப்பூசிகளை போட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என மத்தியஅரசு  ஒப்புக்கொண்டுள்ளது. அது தொடர்பாக  புள்ளி விவரம் மக்களவையில் கொடுக்கப்பட்டுள்ளது.