நகர்புறங்களில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான விதிமுறைகள் வெளியீடு! தமிழக அரசு

Must read

சென்னை: தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக  கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமியற்றப்பட்டுள்ள நிலையில், அது  இன்னமும் செயல்பாட்டுக்கு வராத நிலை இருந்து வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் (2022) 10ந்தேதி  நடைபெற்ற  மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத் துறை அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து, தற்போது அதற்கான வழிகாட்டுதல்களை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் உள்ளிட்ட பதவிகள் உள்ளது. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வார்டு கமிட்டி

இதன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும். ஒரு வார்டில் உள்ள ஏரியாக்களின் அடிப்படையில் வார்டு கமிட்டி உறுப்பிர்களை நியமித்து கொள்ளலாம். இந்த தலைவராக அந்த வார்டின் கவுன்சிலர் இருப்பார். 3 மாதத்திற்கு ஒரு முறை வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும்.

ஏரியா சபை

மாநகராட்சிகளில் 5 லட்சம் வரை மக்களின் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகள் இருக்கலாம். 5 முதல் 10 லட்சம் வரை உள்ள மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகள் இருக்கலாம். 10 லட்த்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகள் இருக்கலாம். நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 சபைகளும், பேரூராட்சியில் ஒரு வார்டில் 3 சபைகளும் இருக்கலாம். இந்த கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற வேண்டும்.

பணிகள்

வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகள் தங்களின் வார்டுக்கு தேவையான திட்டங்களை குறித்தபரிந்துரைகளை அளிக்கலாம். பொதுமக்களின் குறைகளை மன்றத்தில் தெரிவித்து தீர்வு காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article