சென்னை: தமிழக அரசு 2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி,  மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

2016-ம் ஆண்டு தமிழ்நாட்டில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி, “மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய” உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து” உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக போக்குவரத்துதுறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, பேருந்துகளின் தேவையை முன்னிட்டு, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 242 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இது மொத்த கொள்முதலில் 37 சதவீதம். இதுமட்டுமின்றி, தொழில்நுட்பக் குழு பரிந்துரைப்படி சென்னையில் உள்ள 956 பேருந்து நிறுத்தங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டிது இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதற்கான டெண்டர் நடவடிக்கைகளை தொடங்க அனுமதியளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, “மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை பின்பற்றியே பேருந்துகள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி 2213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல (எலக்ட்ரிக்) பேருந்துகளையும் கொள்முதல் செய்ய போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.