சென்னை:  தமிழ்நாட்டில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 18 காப்பகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மட்டுமின்றி தனியார்கள் மூலமும் ஏராளமான காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. வறுமையில் வாடுபவர்களுக்காகவும், முதியோர்களுக்காகவும், ஆதரவற்றவர்களுக்காகவுடம், ஊனமுற்றோர் மற்றும் சிறுவர்களுக்காக ஏராளமான காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பாதிக்குப்பாதி அரசு அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. மேலும், பல காப்பங்கள் அங்கு சேர்ப்படுபவர்களுக்கு முறையான உணவு, உறைவிடம் வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்க முன்பு விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகள் ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகளும், மாற்றுத்திறனாளிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதுடன், பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்றது தெரிய வந்தது. இதுதொடர்பான புகார்களின் பேரில் அங்கு ஆய்வு செய்த காவல்துறையினர், அந்த காப்பகம் பதிவு செய்யப்படாமல் முறைகேடாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து,  விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தை நடத்தி வந்த  ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மன நலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்பட அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை அடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த காப்பகங் களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உள்ளதால் காப்பக உரிமையாளர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 18 காப்பகங்களுக்கும் ஒரு வாரத்தில் விளக்கம் கொடுக்கும்படி தமிழகஅரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குள் புதிய விண்ணப்பத்தை கொடுத்து முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் காப்பகங்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.