ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.  வேட்பாளர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கேஎஸ்.தென்னரசு, மேனகா, ஆனந்த் ஆகியோர் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை செய்தனர்.

காலை 9 மணி வரை 10.10% வாக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 238 வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் வாக்களிக்க காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கலைமகள் பள்ளியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்களித்தார். 
ரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தனது மனைவி பிரஷீதா உடன் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வந்துள்ளார்
தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி துண்டு, வேட்டியுடன் வந்ததற்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து கட்சி அடையாளமின்றி வந்து வாக்களித்தார் தேமுதிக வேட்பாளர் ஆனந்த்  தனது  வாக்கினை  பதிவு செய்தார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில், பெரியார் நகர் வாக்குச்சாவடியில் திமுக, அதிமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு மை அழிகிறது என அதிமுக புகார் அளித்துள்ளது.

இதற்கு பதில் கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், வெற்றிபெற முடியாது என்பதால், எதிர்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர் என்றார்.  மேலும், இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம்,” என்று கூறினார்.

கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த சிவகாமி என்ற வாக்காளரிடம் ஆதார் அட்டை ஏற்க மறுத்ததாக புகார் எழுந்து வருகிறது.    அதுபோல வாக்களிக்க அனுமதி அளித்துள்ள சான்றுகள் விவகாரம் தொடர்பாக தேமுதிக வேட்பாளருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோடு பெரியண்ணா வீதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்துவதை முகவர் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. சக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து வாக்குப்பதிவு தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டது.

பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 75வயது மூதாட்டி ஒருவர் தள்ளுவண்டியில் வந்து தனது வாக்கினை பதிவு செய்ததார். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.