டில்லி,

மிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலாலை நியமனம் செய்து ஜனாதிபதி கோவிந்த் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், ஓராண்டுக்கு பிறகு தற்போது நிரந்தர கவர்னர் நியமனம் செய்யப்பட்டிருப்பது  கவர்னரிடம் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.

 

தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசய்யா ஓய்வு பெற்றப் பின் மகாராஷ்டிரா கவர்னர் வித்யா சாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக  நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய அரசியல் பயணம் குறித்து பார்க்கலாம்..

பன்வாரிலாலுக்கு தற்போது 77 வயதாகிறது. இவரது அரசியல் பயணம் பார்வர்டு பிளாக் கட்சியில் தொடங்கி, காங்கிரசுக்கு வந்து, தற்போது பாரதியஜனதாவில் ஐக்கியமாகி பதவிகளை வகித்து வருகிறார்.

மூன்றுமுறை நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியிலுல் வெற்றி பெற்றவர். இதில் இரண்டு முறை காங்கிரஸ் சார்பிலும், ஒருமுறை பி.ஜே.பி சார்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தவர் பன்வாரிலால் புரோஹித்.

இளைஞராக இருந்தபோது கம்யூனிஸ கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு,   அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்துக்கு வித்திட்டார். ஆனால், சில வருடங்களில் கம்யூனிஸ்டு கொள்கைகள் கசக்க ஆரம்பித்தால், அங்கிருந்து விலகி காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதையடுத்து அவருக்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாக்பூர் கிழக்குப் பகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானர்.

பின்னர்  1980 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாக்பூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

காங்கிரஸ் கட்சியில் அவரது ஈடுபாடு காரணமாக அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி 1984ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாட்டின்  எட்டாவது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தொடர்ந்து 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பன்வாரிலால் இந்துத்துவாவில் அதிக ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக  காங்கிரஸ் தலைமையுடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி பாரதியஜனதாவில் ஐக்கியமானார்.

ராமர் கோவில் கட்டும் பணியில் பாரதியஜனதாவுடன் கைகோர்த்து களமிறங்கினார். அதன் காரணமாக அவருக்கு1991ம் ஆண்டு பா.ஜ. சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.

ஆனால், தொடர்ந்து அந்த தொகுதி மக்களிடம் விசுவாசமாக இருந்த காரணத்தினால் 1996ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ சார்பாக மீண்டும் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானர்.

அந்த நேரத்தில் வாஜ்பாய் ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்த பிரமோத் மஹாஜனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கிருந்து விலகினார்.

அதையடுத்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் 1999-ல் இணைந்தார். அதையடுத்து வந்த மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கினார். ஆனால்,அவர் தோல்வியையை தழுவினார்.

சற்று காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த பன்வாரிலால் 2003ல்  மீண்டும் தனிக்கட்சி ஆரம்பித்து களம் புகுந்தார். அவர் தொடங்கிய கட்சிக்கு விதர்பா ராஜ்ய கட்சி என்று பெயரிட்டார்.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கட்சி மக்களிடம் வரவேற்பு பெறாததால் மீண்டும் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

அதைத்தொடர்ந்து 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதையடுத்து அவருக்கு கவர்னர் பதவி வழங்க பா.ஜ. முடிவு செய்தது.

இவர், 2015-ல் அசாம் மாநில ஆளுநராகவும், 2016-ல் மேகாலயா மாநில ஆளுநராகவும் இருந்தார்.

ஓராண்டு மட்டுமே அங்கு பணியாற்றி உள்ள நிலையில், தற்போது தமிழக கவர்னராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் தமிழக கவர்னராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.