டெல்லி: ஜனவரி 26ந்தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும்  குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தி பங்குபெறுகிறது. இந்த அலங்கார ஊர்தியானது, பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா ஜனவரி 26ந்தேதி (நாளை மறுதினம்) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் முப்படைகளுடன் கூடிய பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில் பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் பங்குபெறுகிறது. கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டு களாக குடியரசு தின அணிவகுப்பு பிரமாண்டமாக கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு  பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தற்போது அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. நேற்று டெல்லி  கடமையின் பாதையில்  நடைபெற்ற  முழு அணிவகுப்பு ஒத்திகையின்போது,  தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது. அந்த அலங்கார ஊர்தியானது, பெண்களை கவுரவப்படுத்தும் வகையில், டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் ஊர்தி கட்டமைக்கப்பட்டது.

ஊர்தியின் முகப்பில் அவ்வையாரின் உருவம்  அமைக்கப்பட்டு உள்ளதுடன், அது ஒரு மண்டபத்தின் மேலே இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் நாலா புறங்களிலும் சிற்பங்கள் இடம்பெற்று இருந்தன. அதில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிற்பமும் இருந்தது. இந்த கட்டமைப்பின் பின்னால் தமிழகத்தின் புகழ்பெற்ற பெண்கள் சிலைகளாக உருவாக்கப்பட்டு இருந்தனர். தஞ்சை பாலசரஸ்வதி பரதம் ஆடுவது போலவும், எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைக்கருவியுடனும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மருத்துவப்பையுடனும் சிலைகளாகி இருந்தனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலையும் இடம்பெற்று இருந்தன.

அத்துடன், வாழும் இயற்கை விவசாயி பாப்பம்மாள் கையில் மண்வெட்டியுடன் நிற்கும் சிலையும் இந்த ஊர்தியில் இடம்பெற்றுள்ளது. இந்த கட்டமைப்புக்கு பின்னால் தஞ்சை கோபுரம் இருந்தது. ஊர்தியின் இருபுறத்திலும் மேளவாத்தியங்களுடன் கலைஞர்கள் நடனமாடி சென்றனர்.