சென்னை: தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பேனர்கள், விளம்பரங்கள் போன்ற வற்றில் இந்திய பிரதமர் மோடியின் படம் புறக்கணிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டு கொதித்து போயுள்ள பாஜகவினர், அரசு வைத்துள்ள விளம்பர போர்டுகளில், பிரதமர் மோடியின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டி வருகின்றனர். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதிகள் ஜூலை 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 150 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக கணினி அறை, தகவல் தொடர்பு சாதனம் உடன் கூடிய அறை, சேர்மன் அறை, ஒருங்கிணைப்பாளர் அறை என அனைத்து வசதிகளுடன் கூடிய தலைமை அலுவலகம் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ளது.  சர்வதேச செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக முழு செலவையும் தமிழக அரசே ஏற்பதாக அறிவித்து உள்ளது.மொத்தம் ரூ.100 கோடிக்கு மேல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி  விழிப்புணர்வு பிரச்சாரமாக தமிழகமெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் மட்டுமே உள்ளதாகவும், பிரதமர் மோடியின் படம் இல்லை என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். அதுபோல பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களிலும் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை ஏற்கனவே பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், நாளை போட்டியின் தொடக்க விழாவையும் பிரதமர் மோடியே தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிலையில், தமிழகஅரசின் விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்த பாஜகவின்-ஸ்போர்ட்ஸ் பிரிவினர் செஸ் பேனர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டி வருகின்றனர். மற்ற பாஜகவினரும் தமிழகம் முழுவதும் இதுபோல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,  சென்னையில் தேசிய பெருமை வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற தயாராகி வருகின்றது. தமிழகத்திற்கு இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது, மிகுந்த பெருமைமிக்க தருணம் என்றவர், உலக நாடுகளில் உள்ளவர்களிடமெல்லாம் `உங்களுக்கு யார் பிரதமராக வரவேண்டும்? எனக்கேட்டால் அவர்களே நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும் என தெரிவிக்கின்றார்கள். உலக நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு மூலமாகவே இக்கருத்து நிரூபனமாகியுள்ளது. இப்படியாக நம் நாட்டின் அடையாளமாக இருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படம், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் எங்குமே வைக்கப்படவில்லை. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும். இனி எல்லா இடங்களிலும் மோடியின் படம் இடம்பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.