சேலையூர், சிட்லபாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளால் ஏற்படும் வெள்ள சேதத்தை தவிர்க்க அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி அறப்போர் இயக்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக சிட்லபாக்கம் மற்றும் சேலையூர் பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதில், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு கூறிய தலைமைச் செயலாளர், அந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்திருப்பார் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், இந்த பகுதிகளில் உள்ள புறம்போக்கு இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாதபடி கணினியில் குறியீடுகள் செய்யப்படவேண்டும் என்றும் மீறி அந்த இடங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த முயற்சிக்கு, சார் பதிவாளர், மாவட்ட பதிவாளர் மற்றும் பத்திரப் பதிவுத் துறை டி.ஐ.ஜி. உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் விதிகளுக்குப் புறம்பாக பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் முறையான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.