சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்படாமல் இருக்க, அந்த சதுப்பு நிலத்தின்மேல்  சுமார் 2 கிலோ மீட்டர் அளவுக்கு உயர்மட்ட 6வழிச்சாலை மேம்பாலம்  ரூ.500 கோடியில் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையின் முக்கிய பகுதியான பள்ளிக்கரணை சதுப்புநிலம் 1,729 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த பகுதியில் கட்டிடங்கள் உள்பட எந்தவொரு பணிகளும் நடைபெறக்கூடாது என சுற்றுச்சூல்துறை, நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது கடல்நீர் ஊருக்குள் புகும் போது, அதை தடுத்து தேக்கி வைத்து, பாதிப்பை தடுக்கும் தன்மை கொண்டது. தற்போது இந்த நிலமானது, சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், உலக தரத்தில் கண்காணிக்கப்பட உள்ளதால், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.

ஆனால், இந்த சதுப்பு நிலத்தில் சுமார்  29 ஏக்கர் பரப்பை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். , மலை போல் குவிந்த குப்பை, கட்டட கழிவுகளால் சதுப்பு நிலம் மாசடைந்து, பறவைகள் வரத்து குறைந்தது. இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தற்போது அங்கு குப்பை கூளங்கள் கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அங்குள்ள ‘பயோ மைனிங்’ முறையில் குப்பை மறுசுழற்சி செய்யப்படுகிறது. கரை பகுதியில், சூழலியல் பூங்கா அமைப்பது, மரக்கன்றுகள் நடுவது என, சதுப்பு நிலம் பாதுகாப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த சதுப்புநிலத்தில், 10.6 கி.மீ., துாரம் கொண்ட  பல்லாவரம் – துரைப்பாக்கம் 200 அடி அகல ரேடியல் சாலை, அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சதுப்பு நிலத்தின் நடுவில் செல்கிறது.  இதன்பாதிப்புதான் கடந்த  2005ம் ஆண்டு பெய்த கனமழையின் போது, சதுப்பு நிலத்தை சுற்றி உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், சதுப்பு நிலத்தின்மீதுள்ள சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூர சாலையை அகற்றிவிட்டு,  2 கி.மீ., நீளத்தில், ஆறுவழி மேம்பால சாலை அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால்,  இந்த மேம்பால சாலை அமைக்க சர்வதேச சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியமாகி உள்ளது.

இதையடுத்து, 6வழிச்சாலை கொண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ. 500 கோடியில், உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சர்வதேச சுற்றுசசூழல் அமைப்பிடம் ஒப்புதல் பெற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.