டெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும்  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை நிபந்தனையாக கொள்ளும் சட்ட விதிகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டதால், நீதிபதிகள் அதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையிர், ரிட் மனுவை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது.

நாடு முழுவதும்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை தகுதியாகக் கொண்டு சட்ட விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் சபரிஸ் சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் தேர்வு அறிமுகம் மற்றும் அதை தொடர்வது, தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வை அறிமுகம் செய்தது, கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக உள்ளதாகவும், மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடங்களில் மாணவர்களை அனுமதிக்கும் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாடு அரசை கட்டுப்படுத்தாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற நீட் தேர்வு நிபந்தனைக்கான சட்ட விதிகளை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

 நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ரிட் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்  என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள்,  தமிழ்நாடு அரசு ரிட் மனுவை தாக்கல் செய்ய யார் யோசனை அளித்தது? எப்படி ரிட் மனு தாக்கல் செய்யலாம்? என கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரிட் மனுவை வாபஸ் பெறுவதாக கோரியது. அதைத்தொடர்ந்து நீதிபதிகள், ரிட் மனுமை வாபஸ் பெற அனுமதி அளித்தது.

இந்த நிலையில்,  தமிழகஅரசின் புதிய மனுமீது விரைவில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.