சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் இன்று திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதிரடியாக நடைபெற்ற இந்த சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள். கடந்த சில நாட்களாக அதிமுகவின் வேலுமணி தரப்பில் செயல்பட்டு, சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். இவர்கள் அதிமுக மீதான அதிருப்தி காரணமாக, தற்போது தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

அதன்படி, மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44 ஆக குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 4 தொகுதிகள் காலியாகி உள்ளது. திருச்சி கிழக்குடன் சேர்த்து இந்த 4 தொகுதிகளுக்கு வரும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும்.
முன்னதாக, 2026 சட்டசபைத் தேர்தலில் வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் போன்ற முக்கிய தலைவர்கள் தனி அணியாக செயல்படத் தொடங்கினர். . முன்னாள் அமைச்சர்கள் பலர் டெபாசிட் இழந்ததற்கு எடப்பாடியே முக்கிய காரணம் என சண்முகம் தரப்பு குற்றம் சாட்டியது.
தமிழ்நாடு சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் . அதிலும் அதிமுக கொறடாவை மீறி வாக்களித்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டாகப் பிரிந்து, 25 பேர் தவெக-விற்கு ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

தவெக-வை ஆதரித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 பேரை அதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 25 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் மனு அளித்தனர் எடப்பாடி தரப்பினர். கட்சித் தாவல் தடை சட்டம் பாயாமல் இருக்க, வேலுமணி தரப்புக்கு 32 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை; ஆனால் 25 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், சபாநாயகரால் தனி அணியாக அறிவிக்க முடியவில்லை.
அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதற்கிடையில், சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அந்த அணிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வேலுமணி தரப்பைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் அமைதியாக மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் 25 பேராக இருந்த அணியின் பலம் தற்போது 17 ஆகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையிலான கிளர்ச்சி எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியில் மீண்டும் இணையலாம் என்ற சாத்தியம் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், மற்றொருபுறம், சபாநாயகரிடம் கொடுத்த புகாரை எடப்பாடி திரும்பப் பெற்றுவிட்டாலே போதும், வேலுமணி குழுவினரின் எம்எல்ஏ பதவிகள் தப்பித்துவிடும் என்ற நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பில், : 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஈபிஎஸ், வேலுமணி தரப்பு கடிதங்கள் பரிசீலனையில் உள்ளன, உரிய நேரத்தில் முடிவு. எம்எல்ஏக்கள் தாங்கள் பதவி விலகுவதற்கான காரணத்தை கூற தேவையில்லை என்று சபாநாயகர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
.சட்டமன்ற பேரவை விதி 21-ன் படி, பதவி விலக விரும்பும் உறுப்பினர், அதற்கான படிவத்தில் தன் கைப்பட எழுதி, கையொப்பமிட்டு, நேரில் வந்து அளிக்க வேண்டும் என்பது விதியாகும். இந்த மூன்று உறுப்பினர்களும் தனித்தனியாக நேரில் வந்து, தங்களது கைப்பட எழுதிய கடிதத்தை அளித்ததால், அவர்களின் ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பேரவை விதிகளின்படி, பதவி விலகல் கடிதத்தில் எந்தக் காரணமும் குறிப்பிடத் தேவையில்லை. “இன்று முதல் இப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என்ற வாசகம் இருந்தால் போதுமானது. தபால் மூலம் வரும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த ராஜினாமா விவரங்கள் முறைப்படி தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் அதுகுறித்த மற்ற அறிவிப்புகளை வெளியிடும். கட்சி மாறி ஓட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. விதிகளின்படி உரிய நேரத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொறடா பதவி தொடர்பாக இரண்டு தரப்பிலிருந்தும் கடிதங்கள் வந்துள்ளன. “நாங்கள் தான் கொறடா” என்று இருதரப்பும் கூறுவதால், அதனை ஆய்வு செய்யக் கால அவகாசம் தேவைப்படுகிறது.
சபாநாயகர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க எந்தக் காலக்கெடுவும் இல்லை. எனவே, நான் சட்டத்திற்கும் விதிகளுக்கும் உட்பட்டு உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன். இன்று மேலும் 5 எம்.எல்.ஏ-க்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அது மன்னிப்புக் கடிதம் போன்ற விவரங்களைக் கொண்டது. அக்கடிதங்களை முழுமையாகப் படித்துப் பார்த்து, விதிகளின்படி ஆராய்ந்த பின்னரே முடிவு அறிவிக்கப்படும். மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யும்போது அவர்களுக்கு சபாநாயகர் ஏன் ஆலோசனை வழங்கக் கூடாது? என்ற கேள்வி சரியானதல்ல. அப்படி ஆலோசனை வழங்குவது சபாநாயகரின் வேலை அல்ல.
[youtube-feed feed=1]