கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்திப்பதற்கும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதற்கும் தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க ஒப்புக்கொண்டது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், முதல்வர் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூருக்கு சென்று உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள், கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவற்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் முக்கிய சாட்சிகளாக இருப்பதால், அவர்களை அரசியல் நிர்வாகத்தில் உள்ளவர்கள் நேரடியாகச் சந்திப்பது விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தலாம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 2-ஆம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகளும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் வகையில் இருப்பதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு உதவிகள் குறித்து சிபிஐக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட வேண்டும் என திமுக தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ஹுசைபா அஹ்மதி வலியுறுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரிக்க ஒப்புக்கொண்டது.
[youtube-feed feed=1]