சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை அசாமுக்கு அனுப்பும் திட்டம் இல்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயது பெண் யானை குட்டி கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு  ஜெயமாலா என்ற பெயரும் சூட்டப்பட்டது. இந்த யானை யானை தினசரி ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்து விட்டு வீதி உலா புறப்பட்டு நிகழ்ச்சிக்கு வந்து செல்லும்.

இந்த யானை பாகன்களால் தாக்கப்பட்டதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. விசாரணையில், அந்த சம்பவம், கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி யானைகள் முகாமில் வைத்து யானை தாக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக  யானை பாகன்கள் இரண்டு பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ‌ புதிய பகன்கள் நியமிக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அந்த டவிடியோவை பார்த்த அசாம் மாநில வனத்துறை அதிகாரிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, யானை கோவிலில் பராமரிக்க முறையான உரிமம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அசாம் அதிகாரிகளுடன்  கோவில் அதிகாரிகள், தமிழ்நாடு வனத்துறையினர் பூட்டிய கோவிலுக்குள் ஆலோசனை  நடத்தியதாகவும், அசாம் அதிகாரிகள் கோவில் யானையை அசாமுக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி சுந்தர் மோகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே.ரவீந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை ஜாய்மாலாவை அஸ்ஸாமுக்கு அனுப்பும் திட்டம் ஏதும் தமிழக அரசுக்கு இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்ததார்.