சென்னை: தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மனுவுக்கு எதிராக தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

அரசுத்துறைகளில் வேலைவாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி அளவில் பணமோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து செய்ததுடன் அவரது உதவியாளர், உறவினர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். அவரை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வெளிநாடு தப்பிச்செல்லாத வகையில் லுக்அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தனது முன்ஜாமின் மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து,  தமிழக அரசு  சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீது ,  தங்களது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்துள்ளது.