ராமேசுவரம்:  தமிழக மீனவர்கள்  மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்றுமுதல்  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது சிறைபிடித்து வருவதுடன், தமிழக மீனவர்களின் படகுககளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் விடுதலை செய்யப்பட்டாலும், தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு தர மறுத்து வருகிறது. இதனால் தமிழக  மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படை யினர் சிறைபிடித்தனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். இந்த போராட்டம் காரணமாக மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து பிழைப்பு நடத்துபவர்கள் என சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அந்த பகுதியில் உள்ள சுமார்  750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கியுள்ள போராட்டத்தை தொடர்ந்து,  ஏப்ரல் 8-ந்தேதி  மீனவர்கள் தங்களது, ஆதார் அட்டை, மீனவர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும், இலங்கை அரசிடம் தரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனை தீரும் என்று வலியுறுத்தி வரும் இலங்கை மீனவர்கள்,  தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது எழும் கோரிக்கைகளும், கோஷங்களும் பின்னர் பேசப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதனை கண்டித்தும், சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.