இயக்குனர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர் தலைமையில் செயல்படும் தயாரிப்பாளர் சங்கங்களின் பதிவை ரத்து செய்யக் கோரும் வழக்கில் பதிலளிக்க சங்க பதிவாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குழப்பங்கள் காரணமாக நிர்வாகிகளை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த காரணத்தால், நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்கிற சங்கத்தை இயக்குனர் பாரதிராஜா பதிவு செய்திருந்தார். இச்சங்கத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களை மட்டும் இணைத்து செயல்படுவோம் என்று பாரதிராஜா தெரிவித்திருந்தார். பாரதிராஜா தனி சங்கம் தொடங்கிய நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து முரளி ராம நாராயணன் தலைமையில் ஒரு அணியும், இயக்குனர் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட்டன. அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து தன் தலைமையில் தனியாக மற்றொரு சங்கத்தை டி.ராஜேந்தர் உருவாக்கினார். இதனால் எது உண்மையான தயாரிப்பாளர் சங்கம் என்பதில் திரைத் துறையினருக்கே குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் செயல்படும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர் டி.ராஜேந்தர் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த இரு சங்கங்களின் பெயரும், தங்கள் சங்கத்தின் பெயர் போல இருப்பதாகவும், அதனால் குழப்பம் ஏற்படுவதால் சங்கத்தின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை இன்று நடந்த போது, ஏப்ரல் 8க்குள் சங்கங்களின் பதிவாளர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.