சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர்கள் கூட்டம்  தலைவர் திருநாவுக்கரசர்  தலைமையில் இன்று (10.1.2018) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 7ந்தேதி நடைபெற்ற நிலையில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.. அப்போது 14 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 1 இரங்கல் தீர்மானம்

ஒகி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழக மீனவர்களுக்கு ஆழ்ந்தத் இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 2
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக திரு. ராகுல்காந்தி அவர்கள் தேர்வு

கடந்த 19 ஆண்டு காலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மிக சோதனையான காலக்கட்டத்தில் 1998 இல் பொறுப்பேற்று 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த காங்கிரசை 14 மாநிலங்களில் ஆட்சியில் அமர்த்தி வெற்றி வாகை சூடி பலப்படுத்தியவர் அன்னை சோனியா காந்தி அவர்கள். மேலும் 1998 இல் இருந்து 2004 வரை மத்தியில் ஆட்சி செய்த வகுப்புவாத பா.ஜ.க.வை அகற்றி விட்டு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமர வைத்த அன்னை சோனியா காந்தி அவர்களின்; சாதனையை இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது.

இதன்மூலம் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு உறுதுணையாக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு வாழ்த்து கூறி இக்கூட்டம் நெஞ்சார நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. ராகுல்காந்தி அவர்கள் இந்தியா முழுவதும் ஜனநாயக முறையில் அமைப்புத் தேர்தல்கள் நடத்தி, அதன்மூலம் தேர்வு பெற்று, கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி பதவியேற்றது காங்கிரஸ் வரலாற்றில் ஒரு பொன் நாளாக கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக அவர் பொறுபபேற்றது கோடானு கோடி காங்கிரஸ் தொண்டர்களிடையே மிகப்பெரிய எழுச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக மத்தியில் நடைபெற்று வரும் வாக்குறுதிகளை காப்பாற்றாத வகுப்புவாத நோக்கம் கொண்ட பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தப்போகிற ஆற்றல்மிகு தலைவராக திரு. ராகுல்காந்தி அவர்கள் விளங்கி வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க., ஏற்கனவே பெற்ற இடங்களை விட குறைவாக பெற்றது காங்கிரஸ் சுமார் 20 கூடுதல் இடங்களை பெற்றது. இதனால் பா.ஜ.க.வின் அடித்தளம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. இது திரு. ராகுல்காந்தி அவர்களின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக இந்த கூட்டம் கருதுகிறது.

133 ஆண்டுகால இந்திய தேசிய காங்கிரசின் 66 ஆவது தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திரு. ராகுல்காந்தி அவர்களை இக்கூட்டம் மனதார வாழ்த்துகிறது. அவரது கரங்களை பலப்படுத்தி, புதிய சகாப்தம் படைக்க இக்கூட்டம் உறுதி மேற்கொள்கிறது.

தீர்மானம் : 3
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை அமைப்புத் தேர்தல்கள் முடிவுற்ற பிறகு தொடர்ந்து பணியாற்றுகிற வகையில் நியமன அறிவிப்பு வெளியிட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கென தனி இடத்தை பெறுகிற வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிற திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் உறுதி எடுத்துக் கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 4   காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்

தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் கடந்த ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி மிக வெற்றி கரமாக நடத்தப்பட்டு 25 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் இக்கூட்டம் பாராட்டுகிறது. கடந்த பல வருடங்க ளுக்குப் பிறகு அமைப்புத் தேர்தல்கள் மிகுந்த கட்டுப்பாடுடன் நடத்தப்பட்டதை இக்கூட்டம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்தப் பணியை சிறப்பாக செய்கிற வகையில் செயல்பட்ட தமிழக தேர்தல் அதிகாரிகள் திரு. பாபிராஜூ, திரு. சஞ்ஜய் தத் ஆகியோரை இக்கூட்டம் பாராட்டுகிறது. அவர்களுடன் பணியாற்றிய தேர்தல் துணை அதிகாரிகளையும் தேர்தல் பொறுப்பாளர்களையும் இக்கூட்டம் பாராட்டுகிறது.

சட்டமன்றத் தேர்தலை எந்த நேரத்திலும் எதிர்கொள்கிற வகையில் கட்சியின் அமைப்புகளை வலிமைப்படுத்து கிற பொறுப்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு இருப்பதை இக்கூட்டம் உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறது. தமிழகத்தில் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள வாக்குச்சாவடிகளுக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தலில் சிறப்பாக பணியாற்றுகிற வகையில் தகுதிமிக்கவர்களைக் கொண்டு வாக்குச்சாவடிக் குழு அமைப்பதற்கான முயற்சியில் உடனடியாக ஈடுபடுவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது. மேலும் வருகிற பொங்கல் புத்தாண்டிற்குப் பிறகு உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்குவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது. ஜுலை 15 – பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்திற்குள் தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த உறுப்பினர்கள் சேர்ப்பு பணியில் ஈடுபட இக்கூட்டம் உறுதியேற்கிறது.

தீர்மானம் : 5  மத்திய – மாநில அரசுகளின் தமிழக விரோத போக்கு

தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பதவி காலத்திற்குப் பிறகு தற்போது நடைபெற்று வரும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மத்திய அரசிடம் தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிற துணிவை இழந்து விட்டதை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். காவிரி நீர் பெறுவதில் நமது உரிமையை நிலை நாட்டுகிற வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியில் அ.இ.அ.தி.மு.க. அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது.

மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழகத்தில் நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு எடுத்த முயற்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல, தமிழகத்தின் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், உடமைகள் பறிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக 2015 டிசம்பரில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரணமாக ரூபாய் 25 ஆயிரத்து 912 கோடியும், 2016 ஆம் ஆண்டு வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூபாய் 22 ஆயிரத்து 573 கோடியும் தமிழக முதலமைச்சரால் மத்திய பா.ஜ.க. அரசிடம் கேட்கப்பட்டது.

அதேபோல, தமிழகமே வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதையொட்டி நிவாரண தொகையாக ரூபாய் 39 ஆயிரத்து 565 கோடி வேண்டி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். ஆக மொத்தம் தமிழக அரசு கேட்டது ரூபாய் 88 ஆயிரத்து 50 கோடி. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியதோ, ரூபாய் 2 ஆயிரத்து 15 கோடி மட்டுமே. இந்நிலையில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டது ரூபாய் 9,300 கோடி.  ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் 280 கோடி.

இந்நிலையில் தமிழக அரசு நிதி கேட்பதும், மத்திய அரசு அலட்சியப் போக்குடன் பாராமுகமாக இருப்பதுமாக ஒரு நாடகம் தொடர்ந்து தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து பா.ஜ.க.வோ, அ.இ.அ.தி.மு.க.வோ கொஞ்சமும் வெட்கப்படுவதாகவோ, கவலைப்படுவதாகவோ தெரியவில்லை.

தமிழக மக்களுக்கு பல்வேறு இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்கொள்வதற்கு கேட்ட நிதியை கொடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து குரல் கொடுக்க நாடாளுமன்றத்தில் 37 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களையும் பெற்றிருக்கிற அ.இ.அ.தி.மு.க. அஞ்சுவது ஏன் ? மத்திய அரசை எதிர்த்தால் மாநில அரசு சீர்குலைந்து விடும் என்கிற அச்சமா ?

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் சோதனைகளால் ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் சிக்கியிருப்பதால் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து குரல் கொடுக்கிற துணிவை இழந்திருப்பதால் தமிழகத்தின் ஒட்டுமொத்த நலன்கள் தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இத்தகைய போக்கை தடுத்து நிறுத்துவதற்கு ஒரே தீர்வு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தான் என்பதை இக்கூட்டம் வலியுறுத்தி கூற விரும்புகிறது. மேலும் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு எதிர்காலம் இல்லை என்கிற காரணத்தால் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படுகிற போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் : 6 – தமிழக ஆளுநரின் அத்துமீறிய ஆய்வுகள்

இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக இருந்தாலும் உண்மையான நிர்வாக அதிகாரம் அமைச்சர்கள் குழுவிடம் தான் இருக்கிறது என்பதை பல நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. மாநில அமைச்சர் குழுவின் உதவி மற்றும் அறிவுரையின்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். அமைச்சர் குழுவின் அறிவுரைக்கு எதிராக ஆளுநர் செயல்பட இயலாது. ஆளுநருக்கு உள்ள விருப்புரிமையின் அளவு மிகமிக குறைவானதாகும்.
இந்நிலையில் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தொடர்ந்து அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஜனநாயக சம்பிரதாயங்களை உதாசீனப்படுத்துகிற வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்திருப்பதை இக்கூட்டம் கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. மேலும் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநரே நேரிடையாக அரசு நிர்வாகம் சம்மந்தமான விஷயங்களில் ஆய்வு செய்வது அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானதாகும். இத்தகைய போக்கை அ.இ.அ.தி.மு.க. அரசு தடுத்து நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ‘மக்கள் ஆளுநர்” என்று போற்றி மகிழ்வது ஆட்சியாளர்களின் பலகீனமான நிலையை அம்பலப்படுத்துகிறது. மடியில் கணம் இருப்பதால் ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்க்க துணிவற்ற அரசாக எடப்பாடி அரசு விளங்கி வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற ஆளுநரை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு, இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஆளுநரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7 – சிறுபான்மை மக்களுக்கு எதிரான முத்தலாக் மசோதா

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு சிறுபான்மையின மக்களுக்கு எதிரக பல்வேறு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறி முத்தலாக் சட்டவிரோதம் என்று கூறும் வகையில் முஸ்லீம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட மசோதாவை மக்களவையில் பா.ஜ.க.வுக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றியிருக்கிறது. இதில் திருத்தங்களை முன்மொழிந்த காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில் இந்த மசோதா மாநிலங்களவையில் கொண்டு வந்த போது காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்ததால் முத்தலாக் மசோதா பொறுப்பு குழுவிற்கு விடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இஸ்லாமியர்களின் தனிநபர் விஷயத்தில் அப்பட்டமாக தலையிடுகிற பா.ஜ.க.வின் வகுப்புவாத செயல் காங்கிரஸ் கட்சியால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. சிவில் சம்பந்தமான இப்பிரச்சனையை கிரிமினல் சட்டத்திற்கு உட்படுத்தி இஸ்லாமிய தோழர்களுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வடிவை திரும்பப்பெற இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

தீர்மானம் : 8 – சிவகாசி பட்டாசு தொழில்

இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் பெரும்பகுதி சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. உச்சநீதிமன்ற தடை விதிப்பால் 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் சிவகாசியில் தொடர்ந்து கடையடைப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிவகாசி பட்டாசு தொழிலின் முக்கியத்துவத்தை உணராத வகையில் மத்திய – மாநில அரசுகள் செயல்பட்டு வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிற பொதுநல வழக்கில் சிவகாசி பட்டாசு தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிற வகையில் தமிழக அரசு வாதியாக தம்மை இணைத்துக் கொண்டு நல்லதொரு தீர்வு காண வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 9 – 2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு

மத்தியில் நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி மீது களங்கம் கற்பிக்கின்ற வகையில் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி திரு. வினோத் ராய் அறிக்கை வெளியிட்டார். இதை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 2009 நாடாளுமன்றத் தேர்தல் மற்றம் 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடுமையான அவதூறு பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் நிகழ்த்தியதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் சம்மந்தப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு வெளியாகி இருப்பதை இக்கூட்டம் மனதார வரவேற்கிறது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் மீதும், ஆட்சியின் மீதும் சுமத்தப்பட்ட களங்கம் நீக்கப்பட்டிருப்பதை இக்கூட்டம் வரவேற்கிறது.

தீர்மானம் : 10 – கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்ட அறிவிக்க கோருதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கியதால் மீனவர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதோடு, நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. மீனவர்களை மீட்கிற வகையில் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய மத்திய – மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக இன்னும் அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தேடி கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதை அறிந்து இக்கூட்டம் மிகுந்த வேதனை கொள்கிறது. இந்த வேதனையை பகிர்ந்து கொள்கிற வகையில் வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட மீனவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல், சுற்றுலாப் பயணியர் விடுதியில் தங்கிக் கொண்டு மீனவர்களை வரவழைத்து ஒருசில நிமிடங்களே சந்திக்க முற்பட்டதை இக்கூட்டம் மிகுந்த வேதனையோடு கடுமையான கண்டனத்தை தெரிவிக்க விரும்புகிறது. ஆனால் அதே நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மீனவர்கள் பகுதிக்கு நேரில் சென்று அவர்களோடு அமர்ந்து அவர்களது துயரங்களை பொறுமையாக கேட்டு அதில் பங்கு கொண்ட அவரை இக்கூட்டம் நெஞ்சார பாராட்டுகிறது.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து தேசிய பேரிடர் நிதியிலிருந்து அதிக நிதியை பெற வேண்டுமென இக்கூட்டம் கோருகிறது. மேலும் காணாமல் போன மீனவர்களுக்கு கேரள மாநிலத்தில் வழங்கப்பட்டதைப் போல ரூபாய் 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், விவசாயத்தை தொழிலாக கொண்டு நெல், வாழை, ரப்பர், தென்னை சாகுபடி செய்த பயிர்களுக்கு ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
காணாமல் போன மீனவர்களை தேடுகிற பணியை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டுமெனவும், காணாமல் போன மீனவர்களுக்கு வழங்கப்படுகிற இழப்பீட்டுத் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படுவதை மாற்றி, மூன்று மாதத்தில் வழங்கப்பட வேண்டுமெனவும், இவ்விரு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் மத்திய – மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 11 – தலித் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்

மத்தியில் வகுப்புவாத நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். ஆதரவில் செயல்பட்டு வரும் பா.ஜ.க. ஆட்சியில் தலித் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை கண்டிக்கிற வகையில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதல் காரணமாக மாநில பா.ஜ.க. அரசின் ஆதரவோடு கடுமையான வன்முறை தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
அதேபோல, சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறை பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனால் சிறுபான்மை மக்களிடையே பாதுகாப்பற்ற தன்மையும், பதற்றமான நிலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அவலநிலைக்கு முக்கிய காரணம் பா.ஜ.க.வின் வகுப்புவாத அணுகுமுறையாகும். இந்த போக்கை தடுத்து நிறுத்தி, சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 12 – உள்ளாட்சித் தேர்தல் வார்டு சீரமைப்புகள்

அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் கனவான கிராம ராஜ்ஜியம் மலர அமரர் ராஜீவ்காந்தி எடுத்த தீவிர முயற்சியின் விளைவாக ‘பஞ்சாயத்துராஜ் நகர்பாலிகா” சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. ஆனால் இதை உதாசீனப்படுத்துகிற வகையில் அ.இ.அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்தோடு செயல்பட்டு தேவையற்ற சால்ஜாப்புகளை கூறி தேர்தல் நடத்துவதை தவிர்த்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்த பிறகும் தேர்தல் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்காதது மிகுந்த வேதனையைத் தருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் வார்டு வரையறையை உரிய கால அவகாசத்துடன் வெளிப்படையாக நிர்ணயம் செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த முற்படாததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு காலஅவகாசத்தை நீட்டித்து தர வேண்டுமெனவும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமெனவும் மாநில அரசையும், மாநில தேர்தல் ஆணையத்தையும் இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இச்சூழலில் மாவட்டத் தலைவர்கள், தங்களது மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு சீரமைப்பில் தனிக் கவனம் செலுத்திட வேண்டுமென்றும் நியாயமான முறையில் ஒளிவு மறைவின்றி, ஜனநாயக அடிப்படையில் எவருடைய விருப்பு, வெறுப்பிற்கும் இரையாகாமல் அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ற வகையில் சீரமைக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

தீர்மானம் : 13 – போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் 1 லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் அடிப்படையில் 2.57 சதவீத ஊதிய உயர்வு, குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூபாய் 19 ஆயிரத்து 500 மற்றும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூபாய் 7 ஆயிரம் கோடியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் 10 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு காணாத நிலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் மீது அ.இ.அ.தி.மு.க. அரசு திணித்ததாகவே இக்கூட்டம் கருதுகிறது. ஏனெனில் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் தமிழக அரசே தவிர, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அல்ல.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஓட்டுநர்களாக அரசு பணியில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இணையான சம்பளம் தங்களுக்கு வழங்கப்படாததை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பலமுறை சுட்டிக்காட்டி வருகின்றன. எனவே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருப்பது போராட்டத்திற்கு தீர்வு காணாமல் ஆணவப் போக்குடன் செயல்படுவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் நீட்டிக்கப்படுவதால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை தமிழக அரசு உணராமல் இருப்பதன் மூலம் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத போக்கை கடுமையாக கண்டிப்பதோடு இத்தகைய அணுகுமுறையை தமிழக அரசு கைவிட்டு போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொழிற்சங்க தலைவர்களிடம் பேசி பொது மக்கள் துயர் நீக்கவும் போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகளை காக்கவும் தமிழக முதலமைச்சர் உடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

தீர்மானம் : 14 – தலித் மாணவர்களின் கல்வி உதவித் தொகை

பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகை தற்போது பாதியாக குறைக்கப்பட்டிருப்பதை இக்கூட்டம் கண்டிப்பதோடு தலித் மாணவர்களின் கல்வி பயிலும் வாய்ப்பு பாதிக்காத வகையில் ஏற்கனவே வழங்கப்பட்டத் தொகையை தொடர்ந்து வழங்கிட வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.