சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியை முறித்து கொண்டு அமமுக உடன் தேமுதிக கைகோர்த்தது. ஆனால் ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. தேமுதிக பொருளாளர்

பிரேமலதா விஜயகாந்த் உட்பட பலர் டெபாசிட் இழந்தது தான் மிச்சம். இந்த சூழலில் எஞ்சியுள்ள மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி அனைத்து மாவட்ட நகர்ப்புறப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே தயாராக தொடங்கிவிட்டன. திமுக, அதிமுக தலைமையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அமைந்த கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில் விஜயகாந்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒருவேளை புதிய கூட்டணிக்கு அச்சாரமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கான விடை அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளின் மூலம் தெரியவரும்.