சென்னை: 
பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா பங்கேஷ்கர் இந்தி,தமிழ், மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ, எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,  இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் மறைந்தார் என்ற தகவலை அறிந்து துயரமுற்றேன். பல்வேறு மொழிகளில் தனது குரல் இனிமையால் 80 ஆண்டுகளாக கோடிக்கணக்கான ரசிகர்களை லதா மங்கேஷ்கர் பெற்றிருக்கிறார். அவரை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தார், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.