சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் வரவு, செலவு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டிற்கான வரவு, செலவு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மாநில நிதியமைச்சரான தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20ம் தேதி) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வரவு, செலவு விவரங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, தமிழக அரசு வழங்கிய தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு அடிப்படையில் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் வரவு, செலவு விவரங்கள்:
மொத்த செலவினங்கள் -ரூ.3,65,321 கோடி
மொத்த வரவினங்கள் – ரூ.2,73,246 கோடி
வருவாய் பற்றாக்குறை – ரூ. 37,540 கோடி
**பொதுக் கடன் நீங்கலாக
மாநிலத்தின் வருவாயினங்கள்:
2023-24 ஆம் ஆண்டுக்கான வருவாய் வரவினங்கள் 2,70,515 கோடி ரூபாயாக அரசு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது 2022-23 ஆம் ஆண்டை விட (திருத்த மதிப்பீடுகள்) 10.1 சதவீதம் அதிகமாகும். அரசின் சொந்த வரிகள் வாயிலாக பெறப்படும் வருவாய் 19.3 சதவீதம் உயரும் என தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் செலவினங்கள்:
2023-24 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவினங்கள் 3,65,321 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டது. இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள், ஆம் ஆண்டை விட 13.7 சதவீதம் அதிகமாகும்.
வருவாய்ச் செலவினங்கள் பெருமளவில், ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுக்காக செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மூலதனச் செலவினங்கள்:
மூலதனப் பணிகளுக்கு செலவிடுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான உத்வேகத்தை அரசு அளிக்கும். 2023-24 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவு 44,366 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டது.
இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள்) ஆம் ஆண்டை விட 15.7 சதவீதம் அதிகமாகும்.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய்:
மாநிலத்திற்கான பெரும்பான்மையான வருவாயானது அதாவது 73.3 சதவிகிதம் வணிக வரிகள் மூலம் கிடைக்கிறது.
முத்திரை தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு மூலம் 14.1 சதவிகித வருவாய் ஈட்டப்படுகிறது.
மாநில ஆயத்தீர்வை மூலம் 6.5 சதவிகித வருவாயையும், வாகனங்களின் மிதான வரிகள் மூலம் 4.9 சதவிகிதமும் மற்றும் ஏனைய வரிகள் மூலம் 1.2 சதவிகித வருவாயையும் தமிழ்நாடு அரசு ஈட்டி வருகிறது.
தமிழ்நாடு அரசின் கடன் சுமை:
மாநிலங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஏற்கெனவே உள்ள கடனை அடைப்பதற்காகவும், புதிய திட்டங்கள் அறிவிப்பதற்காகவும் கடன் வாங்கும். அந்த வகையில், 2023-2024 நிதியாண்டில், 1லட்சத்து 43ஆயிரத்து 198கோடி ரூபாய் கடன் பெற தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது.
இதன் மூலம், தமிழ்நாடு அரசின் கடன் 7லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதோடு, 51 ஆயிரத்து 332 கோடி ரூபாய் கடனை தமிழ்நாடு அரசு திருப்பி செலுத்தும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.