சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தேவை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயம் சென்னை தி.நகரில் அமைந்துள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பா.ஜனதா அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் மிகவும் துணிச்சலாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிசிடிவி ஆய்வில், அலுவலகத்தின் நுழைவு வாயிலின் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன், மோப்ப நாயுடன் விசாரணை நடைபெற்றது. மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குண்டு வீசியர்களை தேடி வந்தனர். அடுத்த சில மணி நேரத்தில் குண்டு வீசியது தொடர்பாக ரவுடி வினோத் என்பதை காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்துதுடன், நீண்ட விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது. அதில், பாஜகவின் நீட் எதிர்ப்புக்காகவே பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று உள்ளதாகவும், மது போதையில் பெட்ரோல் குண்டை வினோத் வீசியுள்ளதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தபாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காவல்துறையினரின் கதையை ஏற்க மறுப்பதாகவும், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நீட் தேர்விற்காக பாஜக அலுவலகத்தில் குண்டு வீசினார் எனக் கூறுவது நகைச்சுவையாக இருப்பதாக விமர்சித்து உள்ளதுடன், கைதானவருக்கு நீட் என்றால் என்னவென்று கூட தெரியாது என தெரிவித்தார்.
மேலும், இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் மிகப்பெரிய சதி உள்ளது. இதனை விரிவாக விசாரிக்க வேண்டும். தடயத்தை காவல்துறை அழித்துள்ளது என்று காவல்துறைமீது குற்றம் சாட்டியதுடன், இந்த விவகாரத்தில் உண்மையை தன்மையை கண்டறிய தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.