சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக தமிழக பாஜக அறிவித்து உள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகத்திற்கு 3 முறை வர இருக்கும் பிரதமர், அத்துடன் தேர்தல் பிரசாரத்திலும் பிரதமர் மோடி ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற வாய்ப்பு உள்ளது. இப்போதே, திமுக, அதிமுக உள்பட பல கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இதுவரை கூட்டணி குறித்து எந்தவொரு கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணியே சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்று அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை களமிறக்க தமிழக பாஜக ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி, பிரதமர் மோடி 3 கட்டமாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக, பிரதமர் மோடி, தமிழகத்தின் திருக்குறளை உயர்த்தி பேசி, அதை அனைவரும் படிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மோடியின் பேச்சுக்கு வரவேற்பு கிடைக்கும் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அரசு நிகழ்ச்சிக்காக பிரதமர் வரும் 14ந்தேதி சென்னை வருகிறார். அப்போது சென்னை மெட்ரோ விரிவாக்கம், உள்பட ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அர்ஜுன் மார்க்-2’ என்னும் புதிய வகை பீரங்கியை மோடி அறிமுகம் செய்கிறார்.
தொடர்ந்து, சென்னை கடற்கரை-அத்திப்பட்டு 4-வது ரெயில் பாதை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்பணிக்கிறார். இவை தவிர சென்னை ஐ.ஐ.டி. நிகழ்ச்சி உள்பட 5 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் 3 முறை தமிழகம் வர இருக்கும் நிலையில், அத்துடன் தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்கூட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்திலும், அடுத்து கோவை, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் நடத்த தமிழக பாஜக பரிசீலனை செய்து வருகிறது. பிரதமரின் 3 நிகழ்ச்சிகளிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார். சில மத்திய மந்திரிகளும் இதில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் உரையாற்றுகிறார். இது காணொலி காட்சிகளாக ஒளிபரப்பப்படுகிறது. இதற்கான திட்டமிடல் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 3 முறை தமிழகம் வரும் மோடி, அப்போது, சில பிரசார கூட்டங்களிலும் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.