சென்னை:
துரைக்கு வரவிருக்கும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கான தலைவர் மற்றும் பிற வாரிய உறுப்பினர்கள் குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் தலைவர் டாக்டர் .வி.எம்.கடோச் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆனால் பிரச்சனை இதுவல்ல. சில நாட்களுக்கு முன்பு மூத்த பெண்மணியின் வீட்டுக்கு முன்னால் குப்பைகளை வீசி எறிந்து சிறுநீர் கழித்து அநாகரிக செயல்களில் ஈடுபட்ட சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

கில்பாக் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் தலைவருமான (அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறை) டாக்டர் சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் மருத்துவக் குழுவில் நிர்வாக உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் பாஜகவின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தேசியத் தலைவராகவும் உள்ளார். இவரின் நியமத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெண்மணியின் வீட்டுக்கு முன்பு அநாகரிக நடந்துக்கொண்ட டாக்டர் சண்முகம் சுப்பையாவுக்கு எதிராக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண்மணியின் குடும்பத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் தரப்பட்டதால், அவருக்கு எதிரான புகார் வாபஸ் பெறப்பட்டது. காவல்நிலையத்தில் புகார் தெரிவித்த அந்தப் பெண்ணின் மருமகன் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.