சென்னை:
அக்டோபர் 2ந்தேதி மகாத்மா காந்தியின் பிறந்த தினம். அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் விடுமுறை விடப்பபடாமல் செயல்பட்டு வந்தன.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி 1,596 நிறுவனங்களுக்கு தமிழகஅரசு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் 813 நிறுவனங்கள், கடைகள், 653 உணவு நிறுவனங்கள், 8 தோட்ட நிறுவனங்கள் என மொத்தம் 1,596 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளது.
சென்னையில் 566 நிறுவனங்கள், கோவையில் 406, திருச்சியில் 279, மதுரையில் 345 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அரசின் தொழிலாளர் நலச்சட்டப்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி உள்பட ஐந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறையையும் வழங்க வலியுறுத்துகிறது.
விடுமுறை நாட்களில் பணிபுரிந்தால், அவருக்கு மாற்று ஊதியத்துடன் இரட்டை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.