சென்னை:

திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடைபெற்றதைத் தொடர்ந்து, நகை கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த சென்னை காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளத லலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக்கடை பாதுகாப்புக்காக 6 செக்யூரிட்டிகள் இருந்த நிலையிலும்,  கொள்ளையர்கள், நகைக்கடையின் பின்புற சுவரை ஓட்டை போட்டு  உள்ளே நுழைந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர்.  கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளயர்கள், விலங்குகளின் முகங்கள் போல வடிவம் கொண்ட முகமூடிகளை அணிந்துகொண்டும், உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகளை அணிந்துகொண்டும் எந்தவித தடயங்களும் இல்லாத வகையில்  கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னையிலும் நகைகடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சென்னை போலீசார் நகைக்கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

கடையின் பாதுகாப்புக்கு, பாதுகாப்புக் காவலர்களை நிறுத்துவதுடன்,  ஷோரூம்களில் பர்க்லர் அலாரம், பாதுகாப்பு கேஜெட்டுகள் மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்படுவதை உறுதி செய்யுமாறு நகைக் கடை உரிமை யாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.