சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம்  மறுப்பு தெரிவித்து உள்ளது. கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க  முடியாது என உத்தரவிட்டு உள்ளது.

அதாவது, தமிழ்நாட்டின் பணிகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்யும் விதமாக, அரசு பணிகளில் சேர கட்டாயம் தமிழ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.  இதை செயல்படுத்தும் வகையில்,  கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் கட்டாயம் என்பது அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2023 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து  மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள்  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த  வழக்கில் விலக்கு அளிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம்,  அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளது .

தமிழ்நாட்டின் அரசு பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்து. இதை உறுதிப்படுத்தும் வகையில்,  கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறும் நபர்கள் தமிழ் மொழியில் போதுமான அளவு அறிவை கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, தமிழ்நாட்டின் பணிகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்யும் விதமான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.