சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 பணியிடத்திற்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2023  ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, வெளியிடப்படாத நிலையில், தேர்வர்கள் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையாக பதிவிட்டதைத் தொடர்ந்து,  அக்டோபர் மாதம் வெளியிடப்படும்  என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதால், ஆத்திரமுற்ற தேர்வர்கள், #TNPSC என்ற ஹேஷ்டேகையும் #WeWantGroup2Results என்ற ஹேஷ்டேகையும் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி தமிழ்நாடு அரசுக்கு எதிராக திரண்டனர். இதையடுத்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.   குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள்  2024 ஜனவரி  மாதம் 11-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில்,  ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.12 முதல் பிப்.17ம் தேதி வரை நடைபெறும். இதற்கான கலந்தாய்வு பிப்ரவரி-21ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த மாதம் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கான முடிவுகள்‌ தேர்வாணைய வலைதளத்தில்‌ இருவழித்‌ தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/  பார்த்து தெரிந்துகொள்ளலாம்.