கொரோனாவை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்
===========

இரண்டாம் அலை கரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகக் காட்டப்படும் அவலங்கள், எரியூட்டப்படும் சடலங்கள், உயிருக்கான போராட்டங்கள், தவிப்புகள் அத்தனையையும் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் மனநிலை பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

குழந்தைகள் தங்களுக்கு முன் நடக்கும் சிறு சம்பவங்களைக் கொண்டே இந்த உலகத்தை அனுமானித்துக்கொள்கிறார்கள். தன் வீட்டில் வளரும் ஒரு பூனையை வைத்து, உலகத்தில் உள்ள அத்தனை வீட்டிலும் பூனை வளர்கிறது என்று நினைக்கும் மனம்தான் குழந்தைகளுக்கு.

இப்போது நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு என்ன மாதிரியான உலகத்தை அவர்கள் தங்களுக்குள் படம்பிடித்து வைத்திருப்பார்கள்?

நிச்சயமாக, நடக்கும் சம்பவங்களை அவர்கள் மிகையாகவே புரிந்து வைத்திருப்பார்கள்.

சர்வதேசக் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப், கொரோனா தொற்று ஏற்படுத்திய பதற்றத்தால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. குழந்தைகளுடன் உரையாடுவதன் வழியாகவே அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்களின் அச்சத்தைப் போக்க முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், அவர்களிடம் இந்த நோய் குறித்து எப்படி உரையாட வேண்டும் எனச் சில வழிமுறைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

முன்முடிவுகள் இல்லாமல் கொரோனா குறித்து வெளிப்படையான கேள்விகளைக் கேளுங்கள்:

“நம்மைச் சுற்றிப் பரவிக்கொண்டிருக்கும் இந்த நோய் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்பதன் மூலம்,

இந்த நோய் குறித்து அவர்களின் புரிதல் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், அவர்களின் புரிதலை அலட்சியப்படுத்தும் வகையிலோ பரிகசிக்கும் தொனியிலோ நமது உரையாடல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக எழுதவோ வரையவோ சொல்லிக்கூட இந்த நோய் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் புரிதலைத் தெரிந்துகொள்ளலாம்.

உண்மைத் தகவல்களைக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு சொல்லுங்கள்:

முடிந்தவரை உண்மையான தகவல்களை நேர்மையாக அவர்களுக்கு இலகுவாகச் சொல்லிக்கொடுக்கலாம். மருத்துவமனையின் தேவைகள், அதன் போதாமை, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, நம் நாட்டின் மருத்துவ வசதிகள், அவற்றில் இருக்கும் பாகுபாடுகள், மக்களிடம் தென்படும் அச்சம், அறிவியலுக்கு எதிரான நம்பிக்கைகள் என நடப்பு நெருக்கடிக்கான காரணங்கள் அத்தனையையும் இலகுவான மொழியில் சொல்லலாம். மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், அவற்றின் பின்னால் உள்ள நோக்கங்கள் போன்றவற்றையும்கூட மெலிதாகச் சொல்லலாம். ஆனால், அறிவியலுக்கு முரணான தகவல்களைச் சொல்லி அவர்களைக் குழப்பக் கூடாது.

பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய புரிதலை உண்டாக்குதல்:

தனிமனித சுகாதார நடவடிக்கைகளில் நமது நாடு இன்னும் பின்தங்கியே இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் அதைப் பழக்காததுதான். தொற்றுநோய்ப் பரவலைக் கண்கூடாகப் பார்க்கும் குழந்தைகள் அதைத் தடுப்பதற்கான தேவையை நிச்சயம் உணர்ந்துகொள்வார்கள். இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி சுகாதார நடவடிக்கைகளை அவர்களுக்குப் பழக்கலாம்.

நம்பிக்கையூட்டுங்கள்:

தொலைக்காட்சிகளில் அதிகமான இறப்புச் செய்திகளையும், நோய் குறித்த அவலங்களையும் அவர்கள் திரும்பத் திரும்பப் பார்க்க நேர்வதைத் தவிருங்கள். அதையும் மீறி அவர்கள் அதைப் பார்க்கும்போது அது அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தும். அவர்களை அழைத்துப் பேச வேண்டும். நாம் செய்திகளில் பார்ப்பது அரிதானது; ஆனால், பெரும்பாலான மக்கள் இந்த நோயிலிருந்து விடுபட்டுவிடுகிறார்கள் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.

அதே போல், இங்கு யாரும் தனியாகப் போராடவில்லை; ஒட்டுமொத்த மனிதகுலமும் இணைந்து போராடிக்கொண்டிருக்கிறது; ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கிறோம்; உனக்கும் எனக்கும் நோய் வரக் கூடாது என்பதற்காக வெளியே பல்லாயிரக்கணக்கானோர் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்க முயலுங்கள்.

நோய்க்கு எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை உணர்த்துங்கள்:
கரோனா தொடங்கியதிலிருந்து அது தொடர்பாக ஏராளமான பாகுபாடுகள் வந்துவிட்டன. ‘சீனா வைரஸ்’ என்பதில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட மதம், இனம், நாடு, மொழி என அதை வகைப்படுத்தும் முயற்சிகள் திட்டமிட்டு நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்; வயது, பாலினம், மதம், இனம், சாதி, நாடு என்ற எந்தப் பாகுபாடும் இந்த நோய்க்குக் கிடையாது; மனிதர்களே தங்கள் ஆதாயத்துக்காக நோய் குறித்துப் பிரிவினைகளையும் பாகுபாடுகளையும் மக்களிடம் பரப்புகிறார்கள் என்பதைக் குழந்தைகளுக்கு உணர வைக்க வேண்டும்.

பெற்றோர்களே குழந்தைகளுக்கு உதாரணமாக நடந்துகொள்ள வேண்டும்:

இந்த நெருக்கடிக் காலகட்டத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், எப்படி இதை எதிர்கொள்கிறோம், அதற்கு நம்மையும் நமது வாழ்க்கை முறைகளையும் எப்படி மாற்றிக்கொள்கிறோம் என்பது மிக முக்கியமானது. நமது சொல்லுக்கும் செயலுக்கும் எந்த வித முரணுமில்லாமல் இருப்பதன் வழியாகக் குழந்தைகளிடத்திலும் அந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை வளர்த்தெடுக்க முடியும்.

கொரோனா காலத்தில் நாம் பலவித நெருக்கடிகளைச் சந்திக்கிறோம். நமது கவலைகளையும் அச்சங்களையும் பிறரிடம் பகிர்ந்துகொள்கிறோம். ஆனால், குழந்தைகளிடம் நாம் இவற்றைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கும்போது அவர்கள் தங்களுக்குள்ளே இதைப் பற்றிய சித்திரத்தை வரைந்துகொண்டு அதீதப் பதற்றத்துக்கும் அச்சத்துக்கும் ஆளாகிறார்கள். அது நீண்ட நாள் நோக்கில் அவர்களுக்குப் பல உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும். ஆகவே, இயல்பான உரையாடல்களின் மூலமாகவே நம்மால் அந்த அச்சத்தைப் போக்க முடியும்.

– சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: sivabalanela@gmail.com