சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்  வடகிழக்கு பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, பல்வேறு துறை செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர்,  மாநில மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், 1077, 1070 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண் தயார் நிலையில் இருக்க வேண்டும் .

மேலும், பாதிப்பிற்கு உள்ளாகும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நிவாரண மையம் தயாராக வைத்திருக்க வேண்டும்

உணவு, தண்ணீர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உணவை வழங்க சமையல் கூடங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும் போது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்

மாவட்ட ஆட்சியர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

குளங்கள், ஏரிகளில் மழை நீரை சேமிக்க செயல் திட்டம் வைத்து செயலாற்ற வேண்டும்,

மழை நீர் வடிகால் விரைந்து சீரமைத்து, சாலைகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

மீட்பு பணியில் ஈடுபடுகிறவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்  உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மேலும்,  இராணுவம், விமானம், கப்பல், ஒன்றிய நீர்வள ஆணையம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கூறியதுடன்,  கடந்த காலங்களில் வடக்கிழக்கு பருவ மழையின் போது பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

முன்னதாக பருவமழை தொடர்பாக  தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பருவ மழையின் போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து துறை செயலர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, சென்னை உள்பட பல மாவட்டங்களில்,மழை நீர் வடிகால் துாய்மை பணி முகாம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.