தாய்பெய்,  தைவான்

தைவான் நாட்டில் தாயாரை கவனிக்காத பல் மருத்துவருக்கு $ 1 மில்லியன் (ரூ.60 லட்சம்)  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தைவானில் தனது கல்விக்காக பெற்றோர் செலுத்திய தொகையை திருப்பித் தருவதாக மக்கள் சட்டப்படி ஒப்பந்தம் செய்துக் கொள்ள வேண்டும்.    முதுமைக் காலத்தில் பெற்றோரை குழந்தைகள் கவனிக்காமல் விடுவதை தடுக்க இந்த சட்டம் இயற்றப் பட்டுள்ளது.    கவனிக்காமல் விடப்பட்ட பெற்றோர்கள் நீதிமன்றத்தை அணுகி  அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை பெற முடியும்.

தைவான் நாட்டின் தாய்பெய் நகரில் வசிப்பவர் லூ.   இவர் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்.    ராணுவத்தை சேர்ந்தவர் எனக் கூறப்பட்ட சூ என்பவரை காதல் மணம் புரிந்துக் கொண்டுள்ளார்.     உரிமம் இல்லாமலே இவர் லூவின் பல் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்துக் கொண்டுள்ளார்.  இரு மகன்கள் பிறந்த பின் ஒரு நாள் லூவை விவாகரத்து செய்து விட்டு அவர் கணவர் சென்று விட்டார்.    தனது வீட்டாரிடம் இருந்து பணம் பெற்று பல் மருத்துவமனையை நடத்திய லூ தனது மருத்துவமனை வருமானத்தைக் கொண்டு இரு மகன்களையும் வளர்த்துள்ளார்.

அவர்களை பல் மருத்துவம் படிக்க வைத்துள்ள லூ தங்கள் நாட்டு வழக்கப் படி இருவரிடமும் படிப்புச் செலவை திருப்பித் தர வேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளார்.    முதல் மகன் தனது தாய்க்கு தர வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு திருமணம் செய்துக் கொண்டு தனியே சென்றுள்ளார்.   ஆனால் இளைய மகன் பணம் கொடுக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.    அதனால் லூ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவர் மகன் தனது தாயின் மருத்துவமனையில் பணி புரிந்ததால் தனக்கு அவர் $1 மில்லியன் தர வேண்டும் எனவும் அதனால் தற்போது எந்தத் தொகையும் தர வேண்டாம் என வாதாடி உள்ளார்.   ஆனால் லூ தன் மகன் தர வேண்டிய தொகையாக $1.7 மில்லியன் என வாதாடி உள்ளார்.   கணக்கு வழக்குகளை சரி பார்த்த நீதி மன்றம்  லூவுக்கு அவர் மகன் மீதமுள்ள பணத்தை வட்டியுடன் சேர்த்து $1 மில்லியன் ஆக (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 60 லட்சம்) என தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து ஓ சி ஹங் என்னும் பல் மருத்துவர் கருத்து தெரிவிக்கையில், “தாய் தந்தையர் வயதான போது உதவவே கல்வித் தொகையை திருப்பி தர வேண்டும் என்னும் சட்டம் உள்ளது.    ஆனால் எல்லா பெற்றோர்களாலும் வழக்கு தொடுப்பது என்பது நடக்காத காரியம்.   எனவே தங்கள் பெற்றோரை காப்பாற்றுவது மகன்களின் கடமை என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்.   நீதிபதியின் உத்தரவை நான் பாராட்டுகிறேன்.   தாயை கவனிக்காதவர்கள் நாயையும் பன்றியையும் விட கேவலமானவர்கள்”  என தன் முக நூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.