குன்னூர்: மசினகுடி வனப்பகுதியில் மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு மைசூர் வன உயிரியல் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக, மிழக வனத்துறை செயலாளர் சுப்ரியாசாகு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் 4 மனிதர்கள் உள்பட ஏராளமான கால்நடைகளை தொடர்ந்து தாக்கி கொன்ற T23 புலியை 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு,  நேற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

அந்த புலி சிகிச்சைக்காக பவண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், புலி மீது காயங்கள் இருந்தால், அதை மருத்துவகுழு அறிவுறுத்தல்படி, தேசிய புலிகள் ஆணையத்திடம் ஆலோசனை செய்த பின்பு மைசூரில் உள்ள விலங்குகள் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு,  டி23 புலியை பின் தொடர்ந்து தேடுதல் நடத்தியதால் புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது, மேலும், பிற புலிகளுடன் சண்டையிட்டதால் புண்கள் அதிகம் இருந்ததாலும் புலியை வெகு தூரம் அழைத்து செல்ல முடியாது என்பதால் மைசூர் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார்.

தற்போது புலி நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றது எனவும்,மைசூரில் புலிக்கு நல்ல சிகிச்சை கொடுக்க முடியும் என்பதால் புலி சீக்கிரம் குணமடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.  சிகிச்சை முடிந்த பின் 10 நாட்கள் கழித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.

டி23 புலி பிடிக்கப்பட்டது குறித்து கூறிய தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், 21 நாட்களாக 100 ஊழியர்கள் பணி புரிந்தனர் எனவும் கும்கியானைகள , நாய்கள், டிரோன் கேமரா என அனைத்தும் பயன்படுத்தி அறிவியல் பூர்வமான முறையில் புலியை பிடிக்கும் பணி கையாளப்பட்டது என்றும், மயக்க ஊசிய செலுத்திய பின், புலி மயங்கிய பின்னர் இரண்டு மணிநேரம் அதை முழுமையாக பரிசோதனை செய்து மைசூர் மீட்பு மையத்திற்கு அனுப்ப முடிவு செய்தாகவும், அதற்கு கர்நாடக வனத்துறையினரும் முழு ஒத்துழைப்பு அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.