சென்னை: விளையாட்டு வீரர்களின் குறைகளை போக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என மூத்த தடகள போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

தமிழ்நாடு தடகள சங்கம்  சார்பில்  93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி அப்டோபர் 15ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் தொடக்க விழாவாக ஒலிம்பிக் தீபம் ஏற்பட்டது. காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை  துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத்துறையின் மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்துவதற்கும், அவர் தொடர்ந்து இளமையாக இருப்பதற்கும் விளையாட்டின் மீது அவருக்குள்ள ஆர்வமே என்று குறிப்பிட்டவர்,  விளையாட்டு வீரர்களின் குறைகளைப் போக்க விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அமைச்சர் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த போட்டிகள் 18ந்தேதி வரை  3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைய, மூத்த தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வாகும் வீரர்கள், அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் விளையாட உள்ளனர்.