மசினகுடி: ஆட்கொல்லி புலியான டி23 புலியை உயிருடன் பிடிக்க கடந்த 21நாட்களாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில், இன்று பிற்பகல், அந்த புலி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவன் எஸ்டேட், மேபீல்டு, நெல்லிக்குன்னு, மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் 21 நாள்களாக புலியைத் தேடி வந்த நிலையில், இன்று வனத்துறையினரிடம் சிக்கி உள்ளது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி டி23 புலியை பிடித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றியுள்ள தேவன், மசினகுடி பகுதிகளில் 4 பேரை பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாடுகளை வேட்டையாடிய T23 புலியை பிடிக்க வனத்துறையினர் போராடி வந்தனர். காடு மேடு,  நீரோடைகள் , வனப்பகுதி, முட்புதர்கள் போன்றவற்றிலும் புலியை தேடும் பணி நடைபெற்று வந்தது. அத்துடன்,   இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்ப நாய்கள் உதவியுடன் தேடப்பட்டு வந்த டி23 புலி திடீரென மாயமானது. புலியை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த காமிராவில் சிக்காமல், போக்கு காட்டி வந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பலி, தெப்பகாடு, முதுமலை வழியாக தான் வாழ்ந்த போஸ்பாரா வன பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, வனத் துறையினா் போஸ்பாறா சங்கிலி கேட் வனப் பகுதிக்குள் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு புலியின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தவர்கள், மசினகுடி-முதுமலை சாலையில் புலி நடந்து சென்றதை கண்டனர். உடனே, நேற்று இரவு கால்நடை மருத்துவக் குழுவினரின் உதவியுடன் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தியதில், 2 ஊசிகள் புலியின் உடம்பில்  குத்திய நிலையிலும், புலி சோர்வடையாமல், அங்கிருந்து தப்பிச் சென்றனர். அந்த புலியை தொடர்ந்து சென்ற வனத்துறையினர்அதை மேலும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், டி23 புலி இன்று காலை மசினகுடி பகுதியில் புதருக்குள் சென்று பதுங்கியதை கண்ட  வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர், பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தினர். இதனால் புலி மயக்கமடைந்து தரையில் சாய்ந்தது. அதை வனத்துறையினர் கைப்பற்றினர்.

கடந்த 21 நாட்களாக வனத்துறையினரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த புலி தற்போது சிக்கியிருப்பது, அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.