சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என தமிழகஅரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

கோயம்பேடு 100 அடி சாலையில் ஏற்படும் கடுமையான நெரிசலை போக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே மேம்பாலம் கட்டப்பட்டது. ரூ.93.5 கோடி செலவில்  1.3 கி.மீட்டர் தூரம் இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பால பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி சமீபத்தில் (2021) ஆகஸ்டு இறுதியில் முடிவடைந்தது.

இதனால் இந்த மேம்பாலம் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டால்,  வடபழனி – கோயம்பேடு இடையே  போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கோயம்பேடு மேம்பாலத்தை திறப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறது. இதனால், கோயம்பேடு பகுதியில் தற்போதைய பண்டிகை காலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோயம்பேடு மேம்பாலத்தை  உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை  வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்கள் உட்படத் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக அதிமுக அரசு தனிக் கவனம் செலுத்தியது. மிகப் பெரிய சாலை மேம்பாலங்கள், ரயில்வே பாலங்கள் மற்றும் ஆற்றுப் பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.

இதனால் நெரிசலற்ற பொதுப் போக்குவரத்து தமிழகம் முழுவதும் சாத்தியமாயிற்று. அதிமுக அரசு, குறிப்பாக 2017-க்குப் பின்பு, சென்னை மாநகரில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவே மிகப் பெரிய உயர்மட்டப் பாலம் 100 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு ஒப்புதல் தரப்பட்டு, 95 சதவீதப் பணிகள் 2020 டிசம்பர் மாதத்தில் முடிவுற்றிருந்தன. தற்போது பாலப் பணிகள் 99.99 சதவீதம் முடிவுற்ற நிலையில், பாலம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படாத காரணத்தால், தினந்தோறும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர்.

குறிப்பாக, நேற்றைக்கு முன்தினம் (13.10.2021 ) நவராத்திரி பண்டிகையை முன்னிட்டுத் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சோந்த மக்கள் ஒரே சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்ட நிலையில், மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் என்ற செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும், இது போன்ற தொடர் விடுமுறை பண்டிகைக் காலங்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காகப்பேருந்துகளை உடனுக்குடன் தேவைப்படும் மாவட்டங்களுக்கு இயக்குவதைக் கண்காணிக்க, அப்போதைய அதிமுக அரசின் அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நேரில் கோயம்பேட்டிற்கு வருகை தந்து கண்காணித்தனர். தற்போது இந்த அரசு அவ்வாறு செயல்படவில்லை.

அதிமுகவின் அரசில், தமிழகம் முழுவதும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்ட பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு உடனுக்குடன் திறக்கப்பட்டுள்ளன என்பதை இந்த விடியா அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். பாலங்கள் கட்டுவதே போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகத்தான். எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகத் தற்போது கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு உடனுக்குடன் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், அதிமுக அரசால் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்த வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் வேளச்சேரி இரண்டடுக்கு பாலத்தின் முடிந்த பகுதியையும்; 146 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மேடவாக்கம் மேம்பாலம் வேளச்சேரி- தாம்பரம் பாலப் பகுதியையும் உடனடியாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

மேலும், பாலப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட கட்டப்பட்டுள்ள உயாமட்ட சாலை மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாகத் திறக்க வேண்டும் என்று இந்த விடியா அரசைக் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.