அறிமுக இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘தண்ணி வண்டி’. இந்தப் படத்தின் ட்ரெய்லரை டி.ராஜேந்தர் வெளியிட்டார்.

இந்த விழாவில் டி.ராஜேந்தர் பேசுகையில், “ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் ஒரு பெரிய நிறுவனம் ஏ.வி.எம் நிறுவனம். அவர்கள் இன்று ஓடிடி தளத்தில் கால் பதிக்கிறார்கள் என்றால் இது காலத்தின் கட்டாயம். அடுத்த கட்டம் ஓடிடி தளம் என்பதால் நான் கூட ஓடிடி தளம் தொடங்குவேன். எதற்கு என்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குநர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கும் தேவை ஒரு தளம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் திரையரங்குகளில் டிக்கெட் விலை பற்றிக் கடுமையாகச் சாடிப் பேசினார் டி.ராஜேந்தர்.

”திரையரங்குகளில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று நான் பல காலமாகச் சொல்லி வருகிறேன். ரயிலில் கூட பர்ஸ்ட் க்ளாஸ், செகண்ட் க்ளாஸ் இருக்கிறது. சினிமா தியேட்டரில் மட்டும் எல்லாம் ஒரே சீட்டு! இது என்ன சர்வதிகார நாடா? இல்லை ஜனநாயக நாடா? டிக்கெட் 100,150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்தோடு படம் பார்க்க முடியும்?

டிக்கெட் விலைதான் அதிகமென்றால் பாப்கார்ன் விலை 150 ரூபாய். ஆந்திராவில் இன்றும் படம் ஓடுகிறது என்றால் 50 ரூபாய் 70 ரூபாய்தான் டிக்கெட். டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும் என்று பேசுவதற்கு ஏன் யாருக்கும் துணிவில்லை? மனமில்லை? டிக்கெட் விலையைக் குறைத்தால் சிறிய படங்கள் வாழும். நாங்கள் ஏன் லோக்கல் வரி எட்டு சதவிகிதம் கட்ட வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். படம் பார்க்க மக்கள் 50% தான் வர வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி மட்டும் முழுமையாகக் கொடுக்க வேண்டுமா?” என்று டி. ராஜேந்தர் பேசியுள்ளார்.