0
T.nagar, T.nagar என்கிறோமே..அந்த T என்பது லெமன் டீயா, க்ரீன் டீயா, சுக்கு டீயா?
தியாகராய நகர் என்பதே தி.நகர் (T.nagar) என்றும் சுருங்கிப் போயிருக்கிறது. தி.நகரின் பெயருக்குரியவரான சர் பிட்டி தியாகராயர்தான் சென்னை மாநகராட்சியில் நேரடித் தேர்தலில் வெற்றிபெற்ற முதல் நகராண்மைத் தலைவர் (மேயர்). நெசவு, தோல்பதனிடுதல், சுண்ணாம்பு காளவாய், உப்பளம் என பல தொழில்களை செய்துவந்த பணக்காரர். பொதுவாழ்வில் ஈடுபட்டு தன் சொந்தப் பணத்தை செலவிட்டு பலருக்கும் உதவியவர். காங்கிரஸ் கட்சியிலும் அரசு பதவிகளிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இருப்பதை எதிர்த்து திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியைத் தொடங்கிய மூவரில் மூலவர்.
வெள்ளைக்காரர்கள் காலத்தில் இரட்டை ஆட்சி முறையின்கீழ் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வென்றபோது தியாகராயரை முதல்வராகப் பொறுப்பேற்க அழைத்தார் கவர்னர். முதல்வர் பதவி வேண்டாம் என மறுத்துவிட்டு, சென்னை மாநகராட்சி மேயராகவே நீடித்தார். பிரிட்டிஷ் இளவரசரை வரவேற்க வேண்டிய போதும் மேயருக்கான ஆடம்பர உடையைத் தவிர்த்து, தனது வழகக்மான வெள்ளுடை அணிந்தே வரவேற்றார்.
தண்டையார்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவர் கட்டித்தந்ததாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக உறுதுணையாக இருந்தார். பள்ளிக்கூடங்களுடன் தொழிலநுட்ப பயிற்சி நிலையங்களையும் உருவாக்கினார். 1920 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சிப் பள்ளியில் முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தவர் பிட்டி தியாகராயர்தான்.
இன்றைக்கு அனைத்து சமுதாயத்தினரும் கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்று உயர்ந்துவிட்டு, திராவிட இயக்கத்தைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்றால் அதற்கு காரணமானவர்களில் இவர் முதன்மையானவர்.

இன்று.. ஏப்ரல் 27.. தியாரகராயர் பிறந்தநாள். 

(கோவி.லெனின் (Govi Lenin) அவர்களின் முகநூல் பதிவு)