மும்பை:
சு
ஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் படத்தை வெளியிட நீதிபதிகள் தடை  விதித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு இன்னும் சரியான காரணங்கள் கண்டுபிடிக்க முடியாததால் இப்போதுவரை மர்ம சர்ச்சையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் எடுக்க சில இயக்குநர்கள் ஆர்வம் காட்டி எடுத்தும் வருகின்றனர்.அதில், ஒன்றுதான் ‘நய்யே: தி ஜஸ்டிஸ்” திரைப்படம். சுஷாந்த் சிங் ராஜ்புத்தாக ஜுபர் கானும், ரியா சக்ரவர்த்தியாக ஷ்ரேயா சுக்லாவும் நடித்துள்ளனர். திலீப் குலாட்டி இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூன் 11 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், தனது மகன் குறித்த எந்த பயோபிக் படத்தையும் வெளியிடக்கூடாது என்று சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, ”படத்தை வெளியிடக்கூடாது” என்று சுஷாந்த் சிங் தந்தையும், ”சுஷாந்த் சிங் குறித்து படத்தில் எதுவுமே இல்லை. அவரது பெயர், படங்கள் என எதையும் பயன்படுத்தவில்லை” என்று படக்குழுவும் கூறினர்.

இரண்டு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் படத்திற்கு தடை விதித்தனர். மறு தீர்ப்பு வரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என்றும் 11 ஆம் தேதிக்குள் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தீர்ப்பை தள்ளி வைத்துள்ளனர்.