இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கொரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

தற்போதைய சூழலை எதிர்கொள்ள பெருமளவில் ஏற்பட்டுள்ள நிதித்தேவையை சமாளிக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர் .

அந்த வகையில் பிரபல இயக்குநர் சுசீந்திரன் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி திரட்ட, நடிப்பு மற்றும் இயக்கம் பற்றி 10 நாட்கள் கட்டண ஆன்லைன் வகுப்பு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “10 நாட்கள் வகுப்பு நடைபெறுமென்றும், ஒருநாள் கட்டணமாக 100 ரூபாய் என மொத்தம் 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆன்லைன் வகுப்பானது ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 26வரை நடைபெறவுள்ளது. வாரநாட்களில் மட்டும் மாலை 5 மணிமுதல் 6.30 மணிவரை வகுப்பு நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கிடைக்கும் தொகையை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.