ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா விடுத்துள்ள அறிக்கை தற்செயலானது அல்ல. அவரது திரைப்படம் வெளியாக இருப்பதால் இப்படி பேசுகிறார் என்று பீட்டா உறுப்பினர் நிகுன்ஜ் சர்மா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து பேசிய பீட்டாவை சேர்ந்த நிகுன்ஜ் சர்மா “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா பேசியிருப்பது தற்செயலானது அல்ல. அவரது ‘சிங்கம் 3’ படத்தின் வெளியீட்டுக்கு முன் அவர் பேசியிருப்பதை கவனிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், “ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாடுகளும், மனிதர்களும் இறந்துள்ளனர். தொடர்ந்து மரணத்தையும், காயங்களையும் தரும் ஒரு குரூரமான நிகழ்ச்சிதான் ஜல்லிக்கட்டு. இதை நீதிமன்றம் கண்டித்துள்ளது. இப்படிப்பட்ட ஜல்லிக்கட்டை ஆதரித்து பேசி, அதை தனது திரைப்படத்துக்கான விளம்பரமாக பயன்படுத்திக்கொள்வது  மலிவான செயல்” என்றும் நிகுன்ஜ் சர்மா தெரிவித்துள்ளார்.