தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடி சூர்யா – ஜோதிகா மும்பையில் குடியேற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தனது குழந்தைகளான தியா (Diya) மற்றும் தேவ் (Dev) பெயரில் 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தவிர மும்பையிலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதோடு அங்கு ஒரு அப்பார்மெண்டை வாங்கி அவ்வப்போது அங்கு தனது மனைவி ஜோதிகா-வுடன் சென்று ஜோதிகாவின் தாயாரை கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சூர்யா – ஜோதிகா ஜோடி மும்பையின் முக்கிய ஆடம்பர பகுதியில் 70 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன அடுக்குமாடி குறியிருப்பு ஒன்றை வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Gated community என்று சொல்லப்படும் இந்த வளாகத்தில் தோட்டம் மற்றும் பார்க்கிங் வசதியுடன் 9000 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை சூர்யா வாங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் பலர் குடியிருக்கும் இந்த இடத்தில் அடுக்குமாடி வீடு வாங்கியிருக்கும் இவர்கள் அங்கிருந்தபடியே சினிமா மற்றும் தங்கள் தொழிலை விரிவடையச் செய்யும் முயற்சியில் ஈடுபடப்போவதாகக் கூறப்படுகிறது.

தவிர, பள்ளிப் படிப்பை முடிக்க இருக்கும் தனது மகள் தியா-வின் மேற்படிப்பு மற்றும் மகன் தேவ்-வின் கல்விக்கு மும்பை சிறந்த நகரமாக இருக்கும் என்று தீர்மானித்துள்ளனர்.

அதேவேளையில் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு சூர்யாவின் தந்தை சிவக்குமார் மற்றும் தாயார் தவிர தம்பியும் நடிகருமான கார்த்தி மற்றும் சகோதரி பிருந்தா ஆகியோருடன் குடும்பத்துடன் சென்று தங்குவதற்கும் பிறந்தநாள் உள்ளிட்ட சிறிய விழாக்களை கொண்டாட வசதியாக வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த சில வாரங்களாக சூர்யா – ஜோதிகா இருவரும் தங்கள் குழந்தைகளுடன் மும்பையில் தங்கியுள்ள நிலையில், திருமணத்திற்குப் பின் ஜோதிகாவின் சொந்த ஊரான மும்பையில் இத்தனை நாட்கள் தங்கி இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.