அகமதாபாத்

சூரத் நகரில் நடந்த தீ விபத்தை ஒட்டி நடந்த இரு நாள் சோதனையில் குஜராத் மாநிலத்தில் 9000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பாதுகாப்பின்றி உள்ளது தெரிய வந்துள்ளது.

சூரத் நகரில் உள்ள ஒரு மூன்றடுக்கு வணிக வளாகத்தில் ஒரு கல்வி மையம் அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த மையத்தில் தீ பிடித்தத்தில் 22 மாணவர்கள் பலியானார்கள். இதை ஒட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலை மறைவான மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.   இந்த வளாகத்தில் தீயணைப்பு சாதனங்கள் உள்ளதா என்பதை சோதிக்காத இரு தீயணைப்பு துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் முதல்வர் விஜய்ரூபானி மாநிலத்தில் உள்ள அனைத்து வணிக வளாக கட்டிடங்கள் மற்றும் கல்வி மையங்களை உடனடியாக சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகாரிகள் பள்ளிகள், கல்வி மையங்கள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை 2055 அதிகாரிகள் கொண்ட 713 குழுவினரால் நடத்தப்பட்டது.

இந்த 2 நாட்கள் சோதனையில் 9395 கட்டிடங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை ஒட்டி இந்த கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் 3 தினங்களுக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக செய்யாவிடில் இந்த கட்டிடங்கள் மூடப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.